உதயநிதிக்கு ஏமாற்றம் இருக்காது- துணை முதல்வர் பதவி குறித்து மு.க.ஸ்டாலின் பதில்
- கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
- ஏற்கனவே அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சென்னை:
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் மகிழ்ச்சி அடைவோம் என்று மூத்த அமைச்சர்கள் பலரும் கட்சி நிகழ்ச்சிகளில் பேசி வந்தனர். ஆனாலும் இதுவரை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவில்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவரிடம் அமைச்சரவை மாற்றம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
கே: ரொம்ப நாளாக அமைச்சரவை மாற்றம்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி என நீங்களும் சொன்னதை செய்வோம் என கூறி இருக்கிறீர்களே?
ப: அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது.
கே: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறதா?
ப: எல்லாம் தயாராகவே உள்ளது. தலைமைச் செயலாளர் அனைத்து கலெக்டர்களிடமும் பேசி உள்ளார். நானும் 2 நாளில் அழைத்து பேச உள்ளேன்.
கே: கொளத்தூர் தொகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டது பற்றி?
ப: இது எப்போதும் என்னுடைய சொந்த தொகுதி. எங்க வீட்டு பிள்ளை மாதிரி பார்க்கிற தொகுதி இது. அதனால் எப்போதும் வந்துகிட்டு இருப்பேன். நினைத்த நேரத்தில் வருவேன்.
கே: வெளிநாடு சுற்றுப்பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்களே?
ப: அவர்களுடைய வெள்ளை அறிக்கை எந்த அளவுக்கு இருந்தது என்று உங்களுக்கு தெரியும். இது ஏமாத்துகிற திட்டம் இல்லை. ஏமாத்துகிற நிதி ஒதுக்கீடு இல்லை. அதனால் ஏற்கனவே அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுவே வெள்ளை அறிக்கைதான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக அவர் கொளத்தூர் ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
அதன் பிறகு ஜி.கே.எம்.காலனி 12-வது தெருவில் உள்ள சென்னை துவக்கப் பள்ளியை திறந்து வைத்து அங்குள்ள மாணவ-மாணவிகளுக்கு புத்தக பை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.
அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சாமி மடத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட உடற்பயிற்சி கூடம், நேர்மை நகர் மயான பூமியில் புதியதாக கட்டப்பட்டுள்ள 16-ம் நாள் நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
பேப்பர் மில் சாலையில் புதியதாக அமைய உள்ள தாசில்தார் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்பட உள்ள இடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், மேயர் பிரியா எம்.பி.க்கள் வில்சன், கலாநிதி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.