தமிழ்நாடு செய்திகள்

பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த இயலுமா? அரசிடம் விளக்கம் கேட்கிறது ஐகோர்ட் மதுரை கிளை

Published On 2023-01-02 19:11 IST   |   Update On 2023-01-02 19:11:00 IST
  • பொருட்களை அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து வாங்குவதால் இவை தரமில்லாததாக இருப்பதாக மனுதாரர் குற்றச்சாட்டு
  • அரசு தரப்பில் குறுகிய காலங்களே இருப்பதால் வங்கி கணக்கில் செலுத்துவதை முன்னெடுப்பது கடினம்.

மதுரை:

தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்க உள்ளது. அதை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த இயலுமா என்று தமிழ்நாடு அரசிடம் உரிய விளக்கம் தெரிவிக்க உயர்நீதி மன்ற மதுரை கிளை அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை சுவாமி மலையை சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் ஒரு வழக்கினை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 2.20 கோடி குடும்பத்தினருக்கு இந்த பொங்கல் பரிசானது வழங்கப்படுகிறது. 20 வகையான விவசாய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு, வேட்டி- சேலையும் வழங்கப்படுகிறது.

அரிசி, வெல்லம், முந்திரி உள்ளிட்ட பொருட்களை அருகில் உள்ள மாநிலங்களில் வாங்குவதால் இவை தரமில்லாததாக இருக்கிறது. எனவே தமிழக விவசாயிகளிடம் இந்த பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களை வாங்க வேண்டும் என்று கேட்டிருந்தார். அதேபோல பரிசு தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க முடியுமா? என்று கேட்டு உத்தரவிட கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குறுகிய காலங்களே இருப்பதால் வங்கி கணக்கில் செலுத்துவதை முன்னெடுப்பது கடினம், அதுதவிர மினிமம் பேலஸ் என்று கூறி சில வங்கிகள் பணத்தை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது, அத்துடன் மூன்று வகையான ரேஷன் கார்டுகள் இருப்பதால் அவற்றை பிரிப்பதில் சிக்கல் இருக்கின்றது என்று அரசு தரப்பில் நிர்வாக சிக்கல்களை தெரிவித்தார்கள்.

அதற்கு நீதிபதி, மற்ற துறைகளின் இணைப்பு பணியை போல ஆதார் இணைப்பு பணியையும் செய்யலாமே என கேள்வி எழுப்பினார்கள்.

மேலும், பொங்கல் பரிசு தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த இயலுமா என தமிழ்நாடு அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

Similar News