தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை தொடங்கியது

Published On 2023-06-21 05:39 IST   |   Update On 2023-06-21 05:55:00 IST
  • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து வழங்கப்பட்டது.
  • அறுவை சிகிச்சை குறைந்தது இரண்டரை மணி முதல் அதிகபட்சமாக 4 மணி நேரம் வரை நடைபெறும் என தகவல்.

போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இருதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையின் ஏழாவது தளத்தில் ஸ்கை வியூ அறையில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது. 

மருத்துவர் ரகுராமன் தலைமையிலான குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து வழங்கப்பட்டது.

செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மயக்கவியல் துறை மூத்த மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த அறுவை சிகிச்சை குறைந்தது இரண்டரை மணி முதல் அதிகபட்சமாக 4 மணி நேரம் வரை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி மூன்று நாட்களுக்கு ஐசியூவில் மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருப்பார் என்றும் பிறகு 10 நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News