நாளை மறுநாள் முதல் தி.மு.க.வில் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை
- தி.மு.க. கடந்த முறை ஒதுக்கியதை விட இந்த முறை 2 சீட் குறைத்து 7 தொகுதிகளை கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளது.
- டெல்லியில் இருந்த டி.ஆர்.பாலு எம்.பி. இன்று சென்னை வந்துள்ளதால் மீண்டும் தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கி உள்ளார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது.
காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை போட்டியிட விரும்பும் தொகுதி பட்டியலை தி.மு.க.விடம் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை விட அதிக தொகுதி பெற வேண்டும் என்று விரும்புகிறது. இதற்காக ஒரு பெரிய பட்டியலை தயாரித்து வைத்துள்ளது. ஆனால் தி.மு.க. கடந்த முறை ஒதுக்கியதை விட இந்த முறை 2 சீட் குறைத்து 7 தொகுதிகளை கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழு மாற்றி அமைக்கப்படலாம் என்று தெரிகிறது. முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவாலய பேச்சுவார்த்தைக்கு வருவாரா? இல்லையா? என்பது இனிமேல் தான் தெரிய வரும்.
இந்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் 2-வது கட்ட பேச்சுவார்த்தையை நாளை மறுநாள் முதல் மீண்டும் தொடங்குவதற்கு தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
இந்த குழுவின் தலைவரான தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஆ.ராசா எம்.பி., திருச்சி சிவா எம்.பி., எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பல்வேறு பணிகள் காரணமாக பேச்சுவார்த்தையை தொடங்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் இருந்த டி.ஆர்.பாலு எம்.பி. இன்று சென்னை வந்துள்ளதால் மீண்டும் தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கி உள்ளார்.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை நாளை மறுநாள் முதல் தொடங்கலாம் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தமிழக சட்டசபை கூட்டம் நாளையுடன் முடிவடைவதால் அதன்பிறகு அமைச்சர்கள் அறிவாலயத்துக்கு தினமும் வந்து செல்ல வசதியாக இருக்கும் என்பதால் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதில் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற கட்சிகளுக்கு எத்தனை தொகுதி என்று உடனே முடிவு செய்யப்பட்டு விடும் என அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி கட்சியினர் 2-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு எப்போது வரவேண்டும் என்று முடிவு செய்து அதற்கேற்ப ஒவ்வொரு கட்சிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.