மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று திடீர் சந்திப்பு: பா.ஜனதாவுடன் மீண்டும் கூட்டணியா?
- அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிவால் தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்துள்ளார்.
கோவை:
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா பற்றிய பேசிய கருத்தால் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் மோதல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக்கொண்டது.
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிவால் தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வுடனான கூட்டணியை தொடர பா.ஜ.க. நிர்வாகிகள் தொடர்ந்து முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.வுடனான கூட்டணியை முறிவை தொடர்ந்து தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டு தேசிய தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.
இந்தநிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்துள்ளார். கொடிசியாவில் வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திடீரென சென்று சந்தித்தனர்.
முன்னாள் சபாநாயகரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அமல்கந்தசாமி, மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. செல்வராஜ் ஆகிய 3 பேர் அவரை சந்தித்து பேசினர்.
அப்போது நிர்மலா சீதாராமனுக்கு பூங்கொத்து கொடுத்து அவர்கள் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் உடன் இருந்தார்.
பின்னர் கொடிசியாவில் நடந்த கடன் வழங்கும் விழாவிலும் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டு பேசினர்.
தென்னை தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு கடன் உதவி வழங்க வேண்டும் என ஏற்கனவே 3 எம்.எல்.ஏ.க்களும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று கோவையில் இன்று நடந்த விழாவில் 144 தென்னை விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. தங்கள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை 3 எம்.எல்.ஏ.க்களும் சந்தித்து நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதேசமயம் அ.தி.மு.க. கூட்டணி முறிந்துள்ள நிலையில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த மூத்த நிர்வாகி மற்றும் மந்திரியுமான நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சந்தித்தது முக்கியத்துவம் பெற்றதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஏற்கனவே அ.தி.மு.க. - பா.ஜ.க. அணி முறிவு என்பது நாடகம் என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கும் என பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று சென்னிமலையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசி இருந்தார். இந்தநிலையில் அவர் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.