பர்கூர் வனப்பகுதியில் சாலையில் உலா வந்த ஒற்றை யானை
- வாகனத்தில் செல்பவர்கள் படம் எடுத்தும் கூச்சல் இடுவதால் கோபமடைந்த யானை துரத்தும் நிலை ஏற்படுகிறது.
- சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பகுதியில் யானை, மான், கரடி, செந்நாய் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது பர்கூர் மலைப்பகுதிகளில் அவ்வப்போது மழை பொழிந்து வருவதால் குளிர்ச்சி நிலவி வருகிறது. மேலும் வனக்குட்டைகளில் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் தேங்கி இருப்பதால் தாகத்தை தீர்க்க அந்த தண்ணீரை பருகி செல்கின்றது.
ஆனால் யானை மட்டும் அவ்வப்போது சாலைகளில் குறுக்கே சென்று இடம் பெயர்ந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் செய்வதில்லை. வாகனத்தில் செல்பவர்கள் படம் எடுத்தும் கூச்சல் இடுவதால் கோபமடைந்த யானை துரத்தும் நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் பர்கூர் வனப்பகுதி தாமரைக்கரை சாலையில் ஒற்றை காட்டுயானை அங்கும், இங்குமாய் உலா வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் ஒற்றை யானை வனப்பகுதிக்குள் சென்றது.
இதனால் வனத்துறையினர் வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது பார்த்து அமைதியாக ரசித்து செல்ல வேண்டுமே தவிர அதனை துன்புறுத்தும் வகையில் கூச்சலிடுவது, வாகனத்தை விட்டு கீழே இறங்கி சென்று படம் எடுப்பது கூடாது.
இவை எல்லாம் ஆபத்தை விளைவிக்கும் என்றும், மிகுந்த எச்சரிக்கையோடு வனப்பகுதியை கடக்க வேண்டும் என்று வனத்துறையினர் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.