செய்திகள்
நதியா - உயிரிழந்த நிவிதா, ஹர்ஷிணி

வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற தாய் - 2 மகள்கள் ஆற்றில் மூழ்கி பலி

Published On 2020-12-01 01:54 GMT   |   Update On 2020-12-01 01:54 GMT
குடியாத்தம் அருகே ஆற்றில் ஓடும் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற தாய் - 2 மகள்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோர்தானா அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரம்பி வழிந்தது. இதனால் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வெளியேறி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. படிப்படியாக தண்ணீர் குறைந்து நேற்று சுமார் ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே சென்றது.

ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை காண குடியாத்தம் நகரம் மட்டுமின்றி, அக்கம்பக்கத்து கிராம மக்களும் வந்தனர். காவல் துறையினரும், வருவாய்த்துறையினரும் அவர்களை தண்ணீர் அருகே செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை அருகே உள்ள போடிப்பேட்டை தண்ணீர் டேங்க் அருகே வசிப்பவர் யுவராஜ் (வயது 37). குடியாத்தம் பஸ்நிலையம் அருகே உள்ள மளிகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நதியா (31), இவர்களுக்கு நிவிதா (11), ஹர்ஷிணி (8) என்ற 2 மகள்கள் இருந்தனர். நிவிதா 6-ம் வகுப்பும், ஹர்ஷிணி 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

நேற்று வழக்கம்போல மதிய உணவு இடைவேளையின்போது யுவராஜ் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு பின்னர் கடைக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் மாலை 3.30 மணியளவில் நதியாவிடம், அவருடைய மகள்கள் இருவரும், வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள கவுண்டன்யமகாநதி ஆற்றில் வெள்ளம் செல்வதை பார்க்க அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளனர். உடனே நதியா 2 மகள்களையும் கவுண்டன்யமகாநதி ஆற்றில் தடுப்பணை அருகே அழைத்து சென்று ஆற்றில் வெள்ளம் ஓடுவதை காட்டி உள்ளார்.

அப்போது குழந்தைகளின் காலில் தண்ணீர் தொட்டு சென்றுள்ளது. இதில் அவர்களின் காலில் சகதி ஒட்டியுள்ளது. உடனே தண்ணீருக்குள் சற்று தூரம் அழைத்துச்சென்று தண்ணீரில் கால்களை கழுவிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 2 குழந்தைகளும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாய் நதியா கூச்சலிட்டவாறு, தனக்கு நீச்சல் தெரியாவிட்டாலும் மகள்களை காப்பாற்ற தண்ணீரில் இறங்கினார். அங்கிருந்தவர்களும் அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர்.

ஆனால் அவர்கள் 3 பேரும் ஆழமான பகுதிக்குச் சென்று தண்ணீரில் மூழ்கிவிட்டனர். அதைத்தொடர்ந்து உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்துவிட்டு, இளைஞர்கள் தண்ணீரில் குதித்து 3 பேரையும் தேடினர். அவர்கள் நிவிதாவை மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் மூச்சுத்திணறி இறந்துவிட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தண்ணீரில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேரத்தில் நதியா, ஹர்ஷிணி ஆகியோரை பிணமாக மீட்டனர். தண்ணீரில் மூழ்கி இறந்த தாய் உள்பட 3 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பவம் குறித்து உறவினர்களிடம் கேட்டறிந்தார்.

தண்ணீரை வேடிக்கை பார்க்க சென்று தாய், 2 மகள்கள் என 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கவுண்டன்யமகாநதி ஆற்றில் போடிப்பேட்டை பகுதியில் மணல் அள்ளுவதால் ராட்சத பள்ளங்கள் உருவாகி, அந்த பள்ளத்தில் மூழ்கி 3 பேரும் இறந்துவிட்டதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
Tags:    

Similar News