செய்திகள்
மோர்தானா அணை இடதுபுற கால்வாயில் தண்ணீரை திறந்துவிட்டு கலெக்டர் மலர்தூவியபோது எடுத்த படம்.

குடியாத்தம் அருகே மோர்தானா அணை இடதுபுற கால்வாயில் தண்ணீர் திறப்பு

Published On 2020-11-28 04:25 GMT   |   Update On 2020-11-28 04:25 GMT
குடியாத்தம் அருகே மோர்தானா அணை இடதுபுற கால்வாயில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீரை, கலெக்டர் திறந்து வைத்தார். கரையோர மக்கள் மேடான பகுதிக்கு செல்ல கலெக்டர் அறிவுறுத்தினார்.
குடியாத்தம்:

குடியாத்தத்தை அடுத்த மோர்தானா அணை தண்ணீரை ஜிட்டப்பல்லி செக் டேமில் இருந்து இடதுபுற கால்வாயில் பாசனத்துக்காக வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று மதியம் திறந்து வைத்தார். மோர்தானா அணை இடதுபுற கால்வாய் மூலம் பெரும்பாடி ஏரி, ஒக்கணாபுரம் ஏரி, விரிஞ்சிபுரம் ஏரி, பசுமாத்தூர் சித்தேரி, அக்ராவரம் ஏரி, அம்மணாங்குப்பம் ஏரி, நெட்டேரி, எர்த்தாங்கல் ஏரி, மேல்மொணவூர் ஏரி, இறைவன்காடு ஏரி, மேல்மொணவூர் பெரிய ஏரி, கீழ் ஆலத்தூர் ஏரி, பசுமாத்தூர் பெரிய ஏரி, வேப்பூர் ஏரி, செதுவாலை ஏரி, காவனூர் ஏரி, தொரப்பாடி ஏரி, செருவங்கி ஏரி, சதுப்பேரி உள்பட 19 ஏரிகளுக்கு தண்ணீர் சென்று நிரம்பும் வகையில் இடதுபுற கால்வாய் திறக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து 19 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் பிரிவு கால்வாய்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு செய்தார்.

முன்னதாக, குடியாத்தம் ஒன்றியம் அக்ராவரம் ஆற்றின் கரையோரம் வசித்த பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள முகாமுக்கு சென்று அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 2 நாட்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து அக்ராவரம் தடுப்பணை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் தாழ்வான பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தினார். உப்பரபள்ளி, சேம்பள்ளி, ஜிட்டப்பல்லி ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

ஆய்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் சண்முகம், உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், செயற்பொறியாளர்கள் விஸ்வநாதன், குணசீலன், உதவி திட்ட இயக்குனர் மில்டன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News