செய்திகள்
பொன்னையாற்றில் வெள்ளம் பாய்ந்தோடுவதை காணலாம்

வேலூர் மாவட்டம் முழுவதும் கொட்டித்தீர்த்த மழையால் 17 ஏரிகள் முழுமையாக நிரம்பின

Published On 2020-11-28 01:57 GMT   |   Update On 2020-11-28 01:57 GMT
நிவர் புயலால் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை காரணமாக வேலூர் மாவட்டம் முழுவதும் 17 ஏரிகள் முழுமையாக நிரம்பின.
வேலூர்:

நிவர் புயலின் தாக்கத்தால் வேலூர் மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி பகல் முழுவதும் மிதமான மழை பெய்தது. இதையடுத்து அன்றிரவு புயல் கரையை கடக்கும்போது 10.30 மணி அளவில் பலத்த மழையாக உருவெடுத்தது. விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை 2-வது நாளாக நேற்று முன்தினமும் நீடித்தது.

காலை முதல் பிற்பகல் வரை பலத்த மழை இடைவிடாது பெய்தது. பல இடங்களில் பலத்த காற்றும் வீசியது. அதைத்தொடர்ந்து மழையின் வேகம் குறைந்தபோதிலும் சாரல் மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்தது. மழையின் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்தது.

குறிப்பாக, குடியாத்தம் அருகே 25 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநில காட்டுப்பகுதியை ஒட்டியபடி தமிழக எல்லையில் அமைந்துள்ள மோர்தானா அணை நிரம்பி, கவுண்டய ஆற்றில் உபரிநீர் வெளியேறுகிறது

மேலும், பொன்னை அருகே குட்டாறு, அகரம், நாகநதி, அமிர்தி, சிங்கிரிகோவில் ஆறு, மேல்அரசம்பட்டு ஆகிய ஆறுகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கரையோர மக்களுக்கு தண்டரோ, ஆட்டோ மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மாவட்டத்தில் 101 ஏரிகளில் நேற்றைய நிலவரப்படி 15 ஏரிகளும், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 134 ஏரிகளில் 2 ஏரிகளும் என 17 ஏரிகள் முழுவதும் நிரம்பியது.

மழையின் காரணமாக மாவட்டத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, நெல், பப்பாளி பயிர்கள் சேதமடைந்தது. சேதமடைந்த மரம், மின்கம்பங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேல்பாடி அருகே தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால் பாலத்தை மூழ்கடித்த படி பொன்னையாற்றில் வெள்ளம் பாய்ந்து ஓடியது.

நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரத்தில் வேலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் மொத்தம் 669.3 மி.மீ. மழை பெய்தது. சராசரியாக மாவட்டம் முழுவதும் 111.55 மி.மீ. மழை பெய்திருந்தது.
Tags:    

Similar News