செய்திகள்
பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் ரூ.1 கோடி நகை கொள்ளை
பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் ரூ.1 கோடி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்தவர் மோகன் (வயது 60). இவர் வேலூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். உடல்நலக்குறைவு காரணமாக மோகன் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உதவிக்காக குடும்பத்தினரும் சென்னையில் தங்கினர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து மோகன் மகன் ஹரீஸ் நேற்று இரவு 7 மணியளவில் வேலூருக்கு திரும்பினார். அப்போது பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 250 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் கொள்ளை போயிருந்தது. பின்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்த மர்மநபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 19-ந் தேதி கண்காணிப்பு கேமராக்கள் துண்டிக்கப்பட்டு ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.