செய்திகள்
பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வெற்றிவேல்-பிச்சாயி உடல்கள்.

100 வயதை கடந்த தம்பதி அடுத்தடுத்து இறந்த சோகம்

Published On 2019-11-12 13:16 IST   |   Update On 2019-11-12 13:16:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 100 வயதை கடந்த தம்பதி அடுத்தடுத்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடி ஏ.டி.காலனியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 104). இவரது மனைவி பிச்சாயி (100). இவர்களுக்கு 5 மகன்கள், ஒரு மகள். அவர்கள் மூலம் பேரன்கள், கொள்ளு பேரன்கள் என மொத்தம் 23 பேர் உள்ளனர்.

100 வயதை கடந்து விட்ட நிலையிலும் யாருடைய உதவியும் இன்றி வெற்றிவேலும், பிச்சாயியும் மகன் ஒருவரின் வீட்டில் வாழ்ந்து வந்தனர். வீட்டு வேலைகளை அவர்களே கவனித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக இருவருக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் நன்றாக எழுந்து நடமாடி வந்த அவர்கள் படுத்த படுக்கையாகினர். அவர்களை அவரது மகன்களும், மகளும் கவனித்து வந்தனர்.

நேற்றிரவு வெற்றிவேலுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் இறந்தார். வெற்றிவேல் இறந்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

கணவர் இறந்ததை அறிந்த பிச்சாயி மிகவும் சோகத்துடன், வெற்றிவேல் உடல் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அவரை அவரது உறவினர்கள் தேற்றினர். இருப்பினும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இரவு முதல் இன்று அதிகாலை வரை சோகத்தில் இருந்த பிச்சாயி திடீரென மயக்கமடைந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை எழுப்ப முயன்ற போது அவரும் மரணமடைந்தது தெரியவந்தது. இது உறவினர்கள் மத்தியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. சாவிலும் இணை பிரியாத தம்பதியை பார்த்து பொதுமக்கள் நெகிழ்ச்சியடைந்தனர். இதனை கேள்விப்பட்ட பலர் அங்கு திரண்டு வந்து இருவரது உடல்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

இருவருக்கும் இறுதி சடங்குகள் நடத்துவதுடன், இருவரது உடலையும் ஒன்றாக அடக்கம் செய்ய அவர்களது உறவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், வெற்றிவேலும்- பிச்சாயியும் 100 வயதை கடந்த நிலையிலும் அன்போடு பழகி வந்தனர். வயதான நிலையிலும் கூட யாருடைய உதவியையும் எதிர்பாராமல் சிறிய வேலைகளை அவர்களே செய்து வந்தனர். இருவரும் ஒன்றாக மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

Similar News