செய்திகள்
பொன் ராதாகிருஷ்ணன்

ரஜினிகாந்த் பா.ஜ.க.வில் சேர வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2019-10-22 04:45 GMT   |   Update On 2019-10-22 04:45 GMT
ரஜினிகாந்த் பா.ஜ.க.வில் சேர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் நடைபெறும் நாளன்று விதிமுறைகளை மீறி வசந்தகுமார் எம்.பி. நாங்குநேரி தொகுதிக்குள் வந்தது சட்டப்படி குற்றமாகும். தேர்தல் தோல்வி பயத்தால்தான் வசந்தகுமார் எம்.பி. வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்வதற்காக சென்றுள்ளார்.

போலீசாரும் சம்பிரதாயத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். போலீசார் அவரை மீண்டும் கைது செய்து விசாரணை நடத்தவேண்டும். இந்த விவகாரத்தில் போலீசாருக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்த தொகுதியில் வசந்தகுமார் எம்.பி. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆகியோர் பல்வேறு பகுதிகளில் பணப்பட்டு வாடாவை பட்டவர்த்தனமாக செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.

பஞ்சமி நிலம் மட்டுமின்றி அரசு நிலமாக இருந்தாலும் சரி, அதனை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் சரி அதனை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தி.மு.க. பலமுறை ஆட்சியில் இருந்த கட்சி என்பதால் அவர்கள் ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.



நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் நான் அதை வரவேற்கிறேன். ஆனால் அவர் பா.ஜ.க.வில் சேரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதற்காக முயற்சியை பா.ஜ.க. இதுவரை செய்யவில்லை. டாக்டர் பட்டம் பெற்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி கட்சி மகத்தான வெற்றிபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News