செய்திகள்
முருகன்

வேலூர் ஜெயிலில் முருகன் அறையில் செல்போன் சிக்கியது

Published On 2019-10-19 09:41 GMT   |   Update On 2019-10-19 09:41 GMT
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் முருகன் அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்.

அவருடைய அறையில் ஏற்கனவே ஒரு முறை 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கு வேலூர் கோர்ட்டில் நடந்தது.

இந்த நிலையில் நேற்று முருகனின் அறையில் சிறைத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஆன்ட்ராய்டு செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் அளித்தனர்.

ஜெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்ததாக முருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் முருகனுக்கு ஜெயிலில் சலுகைகளை ரத்து செய்ய சிறைத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

சலுகைகள் ரத்து செய்யப்பட்டால் முருகனை வக்கீல்களை தவிர பார்வையாளர்கள் சந்திக்க முடியாது. மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை பெண்கள் ஜெயிலில் உள்ள அவரது மனைவி நளினியுடன் நடைபெறும் சந்திப்பும் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறைக்குள் இருக்கும் சாதாரண கைதிகளுக்கு உறவினர்கள் கொண்டு செல்லும் பொருட்களையே தீவிர சோதனை செய்த பிறகே உள்ளே கொண்டுசெல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். முருகன் முக்கியமான வழக்கில் தண்டனை பெற்றவர். அவருக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களை மிகவும் தீவிரமாக சோதனை செய்வது வழக்கம்.

அப்படி இருக்கும்போது சிறைக்காவலர்களுக்கு தெரியாமல் முருகன் அறைக்கு எப்படி செல்போன் கொண்டுசெல்ல முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் முருகன் அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News