செய்திகள்
தீ வைத்து எரிக்கப்பட்ட இந்து முன்னணி பிரமுகரின் கார் சேதமடைந்துள்ளதை படத்தில் காணலாம்

புதுக்கோட்டையில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் கார் எரிப்பு

Published On 2019-10-17 16:00 IST   |   Update On 2019-10-17 16:00:00 IST
புதுக்கோட்டையில் இன்று அதிகாலை இந்து முன்னணி மாவட்ட தலைவரின் காருக்கு தீவைத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நிஜாம் காலனி பேலஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். விவசாயியான இவர் புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்து வருகிறார்.

முழுநேர இந்து முன்னணி அமைப்பின் செயல்பாட்டில் இருந்து வரும் வடிவேல், மாவட்டம் முழுவதும் தினந்தோறும் சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய வடிவேல் தனக்கு சொந்தமான சொகுசு காரை வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். இன்று அதிகாலை திடீரென்று வீட்டின் முன்பு மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதை உணர்ந்த வடிவேல் வெளியே வந்தார்.

வீட்டின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதும் அங்கு வந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். உடனே வடிவேல் வெளியே வந்து பார்த்தபோது, அவரது கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் அதற்குள் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்து முன்னணி பிரமுகரின் காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News