செய்திகள்
கோட்டைப்பட்டினம் பகுதியில் பெய்த பலத்த மழையால் அங்கு குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சி.

விடிய, விடிய பெய்த கன மழை- புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Published On 2019-10-16 05:02 GMT   |   Update On 2019-10-16 05:02 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் கனமழை பெய்தது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு பெய்த மழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை அருகே வைத்தூர் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் செம்பாட்டூர் அருகே கீழ முட்டுக்காடு பகுதியில் நேற்று மதியம் வயலில் நிலக்கடலைகளை பறித்து கொண்டிருந்தனர். அப்போது இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் வைத்தூரை சேர்ந்த கலைச்செல்வி (வயது 45), லட்சுமியம்மாள் (60) ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அவர்களை பொதுமக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி (40), விஜயா(45) ஆகியோர் இறந்தனர். வைத்தூர் நடுத்தெருவை சேர்ந்த சரோஜா, நாகலட்சுமி (50), ஜெயலட்சுமி ( 32), ரங்கம்மாள் (50), தமிழரசி (50), வளர்மதி (40), கோவிந்தம்மாள் (50), ஜெயராணி (40), மலர் (35), மீனாள் (35), பூமணி (40), காவேரி (55), சரோஷா (50), அழகுலட்சுமி, சித்ரா (30), லட்சுமி (50), ராஜம்மாள் (40), கருப்பையா (40) உள்பட 19 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களை கலெக்டர் உமாமகேஸ்வரி சந்தித்து ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அம்மாப்பட்டினம் தெற்கு தெரு ஓட்டாங்கரை கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதும் காட்டாற்று வெள்ளம் சென்றது. மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீருடன் சாக்கடையும் புகுந்தது.

இதன் காரணமாக பொதுமக்கள் தூங்க முடியாமல் இரவு முழுவதும் தவித்தனர். அம்மாப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முழுவதும் மழை நீரால் சூழ்ந்துள்ளது. அறந்தாங்கி பகுதியில் உள்ள தர்காவில் கந்தூரி விழா நடைபெற்றது. மழையால் அந்த பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் விழாவில் பங்கேற்க வந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

ஆதனக்கோட்டை-13, பெருங்களூர்-15.80, புதுக்கோட்டை-55.20, ஆலங்குடி- 4.80, கந்தர்வக்கோட்டை -5, கறம்பக்குடி-32.20, மழையூர் -15.20, திருமயம்-6.20, அரிமளம்-37.20, அறந்தாங்கி-7, ஆயங்குடி-3.40, நாகுடி-3.60, மீமிசல்-54.70, ஆவுடையார்கோவில்-25.40, மணமேல்குடி-40.60, கட்டுமாவடி- 40.40, இலுப்பூர்-2, குடுமியான் மலை-2, அன்னவாசல்-5, விராலிமலை-15.20, உடையாளிபட்டி-12.20, கீரனூர்-2.80.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மொத்தம் 398 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 7.30 மணியளவில் லேசான தூரலுடன் மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக திருச்சி மாநகரில் தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி வியாபாரம் சூடு பிடித்துள்ள நிலையில், மழையால் வியாபாரம் பாதிக்கப்படுவதால் தரைக் கடை வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவுமில்லி மீட்டரில் வருமாறு:-

கடவூர்-46.4, பாலவிடுதி- 48.4., மயிலம்பட்டி-14, பஞ்சப்பட்டி-17.2, குளித்தலை-10, கிருஷ்ணராயபுரம்-7. திருச்சி, புதுக்கோட்டை உள்பட 5 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதன் மூலம் நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதனால் பொதுமக்கள்- விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags:    

Similar News