செய்திகள்

அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் - ராமதாஸ் பிரசாரம்

Published On 2019-04-09 03:03 GMT   |   Update On 2019-04-09 03:03 GMT
அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுவது உறுதி என அரக்கோணத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார். #LokSabhaElections2019 #Ramadoss
அரக்கோணம்:

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி கட்சியின் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து மாம்பழம் சின்னத்தில் வாக்குகள் சேரிக்கும் பிரசார பொதுக்கூட்டம் அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் நடந்தது.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் வேலூர் மாவட்டம் 13 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மிகப்பெரிய மாவட்டமாக இருந்து வருகிறது.

பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நான் வலியுறுத்துவேன். மேலும் அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுவது உறுதி.



பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பா.ம.க. நாட்டின் தலையெழுத்தை மாற்றும் சக்தி பெண்களுக்குத்தான் உள்ளது. பெண்களுக்கு ஆக்கும் சக்தி, அழிக்கும் சக்தி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து சமூகத்தினருடன் பாசத்துடனும், தோழமை உணர்வுடனும் இருந்து வருகிறது.

தமிழகத்தில் தி.மு.க. கட்சி கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனராக மு.க.ஸ்டாலினும், நிர்வாக இயக்குனர்களாக அவரது மகன், மருமகன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். மேலும் ஆலோசகர்களாக அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இருந்து வருகின்றனர். அவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொண்டால் தி.மு.க. கட்சி முடிவுக்கு வந்து விடுவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.வேலு மற்றும் அ.தி.மு.க கூட்டணி கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்துதரப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  #LokSabhaElections2019 #Ramadoss


Tags:    

Similar News