2025 - ஒரு பார்வை

2025 REWIND: மக்களின் தேவையை பூர்த்தி செய்ததா தெற்கு ரெயில்வே? ஏ.சி.ரெயிலின் முன்பும், பின்பும்...

Published On 2025-12-22 08:00 IST   |   Update On 2025-12-22 08:00:00 IST
  • சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரையிலான அதிகபட்ச டிக்கெட் கட்டணம் சுமார் ரூ. 105 ஆகும்.
  • ஏ.சி. ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகின்றன.

சென்னையில் உள்ள மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை இருந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த மின்சார ரெயிலின் மூலம் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் இந்த வழித்தடத்தில் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண மின்சார ரெயில்களே இயக்கப்பட்டு வந்தன. எனவே இந்த வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை கடந்த ஏப்ரல் மாதம் தெற்கு ரெயில்வே அறிமுகம் செய்தது.

 

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இந்த புறநகர் மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஏ.சி. ரெயில்களில் தானியங்கி கதவுகள், பயணிகள் தகவல் அமைப்புகள், சிசிடிவி கேமராக்கள் போன்ற மேம்பட்ட வசதிகள் உள்ளன. மேலும் 1,116 பேர் நின்றும் ,3,798 பேர் அமர்ந்தும் பயணிக்கலாம்.

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரையிலான அதிகபட்ச டிக்கெட் கட்டணம் சுமார் ரூ. 105 ஆகும். குறைந்தபட்ச கட்டணம் ரூ. 35-ல் இருந்து தொடங்குகிறது.

இந்த ஏ.சி. ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7:00 மணி மற்றும் மதியம் 3:45 மணிக்கு புறப்பட்டு காலை 8:35 மணி மற்றும் மாலை 5:25 மணி செங்கல்பட்டுக்கு வந்தடையும்.

மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து காலை 9:00 மணி மற்றும் மாலை 5:45 மணிக்கு புறப்பட்டு காலை 10:30 மணி மற்றும் இரவு 7:15 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்தடையும்.

மேலும் இந்த ரெயில் கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் ஆகிய 12 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 

முதலில் இந்த ரெயிலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அது குறைந்தது. ஏ.சி. மின்சார ரெயிலில் எதிர்பார்த்த கூட்டமும் இல்லாததால் காலியாகவே ஓடின. இதற்கு முக்கிய காரணம் கட்டணம் அதிகமாகும். மேலும் மெட்ரோ ரெயில் சேவையின் பயன்பாடு அதிகரித்து வருவதும் ஒரு முக்கிய காரணம் என்று பயணிகள் தெரிவித்தனர். இது தவிர ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் கால அட்டவணையும் பயணிகள் கூட்டம் இல்லாததற்கு காரணம் என்று குற்றச்சாட்டப்பட்டது.

எதுவாக இருப்பினும் கட்டணத்தை குறைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Tags:    

Similar News