செய்திகள்

மதுரையில் சித்திரை திருவிழா - வைகை அணையில் 16-ந் தேதி தண்ணீர் திறப்பு

Published On 2019-04-08 04:53 GMT   |   Update On 2019-04-08 04:53 GMT
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து வருகிற 16-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. #ChithiraiThiruvizha #Vaigaidam
ஆண்டிப்பட்டி:

மதுரை சித்திரை திரு விழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து வருகிற 16-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணை 2 முறை நிரம்பியது. இதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆனால் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரியத் தொடங்கியது.

71 அடி உயரம் உள்ள வைகை அணையில் தற்போது 42.67 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த நீர் இருப்பு 1176 மி. கன அடியாக உள்ளது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வருகிற 16-ந் தேதி மாலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் 17-ந் தேதி 850 கன அடியாகவும், 18-ந் தேதி 500 கன அடியாகவும் குறைக்கப்பட்டு 19-ந் தேதி மாலை தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும். இதன் மூலம் அணையில் இருந்து 3 நாட்களில் 216 மி.கன அடி. தண்ணீர் திறக்கப்பட உள்ளது. சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்த அரசின் உத்தரவிற்காக பொதுப்பணித்துறையினர் காத்திருக்கின்றனர். #ChithiraiThiruvizha #Vaigaidam

Tags:    

Similar News