செய்திகள்
வல்லநாட்டில் கனிமொழி எம்.பி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பாராளுமன்ற தேர்தலுக்கு பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் - கனிமொழி

Published On 2019-03-16 05:15 GMT   |   Update On 2019-03-16 05:15 GMT
பாராளுமன்ற தேர்தலுக்கு பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறினார். #ParliamentElection #Kanimozhi
செய்துங்கநல்லூர்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றியத்தில் தி.மு.க. சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டங்களில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். வல்லநாட்டில் நடந்த ஊராட்சிசபை கூட்டத்தில் கனிமொழி எம்பி. பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்த பயந்து வருகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தாலே போதும் குடிதண்ணீர் பிரச்சனை தீர்ந்து விடும். மேலும் தூத்துக்குடி செல்லும் அனைத்து பேருந்துகளும் வல்லநாட்டில் நின்று செல்ல தி.மு.க. ஆட்சி வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஊரில் மாணவன் ஒருவன் ஆண்கள் பயன்படுத்த பள்ளியில் கழிவறை இல்லை என பேசியுள்ளார். உண்மையிலேயே இது யோசிக்க வேண்டியது. அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் விளையாட்டு விளையாட திடல் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.



மேலும் தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. மத்தியில் ஆளும் பி.ஜே.பி.க்கு காவடி தூக்கி வருகிறது. நீட் பிரச்சனையாக இருந்தாலும் சரி, ஸ்டெர்லைட் பிரச்சனையாக இருந்தாலும் சரி இதற்கெல்லாம் காரணம் அ.தி.மு.க. தான். அவர்களை மன்னிக்கவே கூடாது. 3 இடத்திற்கு இடைத்தேர்தல் வரவில்லை என்றாலும் கூட மற்ற சட்டமன்றத்திற்கு தேர்தல் வருகின்றது. வருகின்ற தேர்தலில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும். அப்போது தமிழக பிரச்சனை அனைத்தும் தீரும். கன்னியாகுமரியில் ராகுல் பேசியது போலவே எங்கள் கூட்டணி ஆட்சி வந்தவுடன் ஜி.எஸ்.டி பிரச்சனையும் தீரும்.

இவ்வாறு அவர் பேசினார். #ParliamentElection #Kanimozhi


Tags:    

Similar News