செய்திகள்

மதுரை சித்திரை தேரோட்டத்தின்போது தேர்தலை நடத்தினால் வாக்குப்பதிவு சதவீதம் பாதிக்கும் - வைகோ

Published On 2019-03-13 08:37 GMT   |   Update On 2019-03-13 10:11 GMT
மதுரை சித்திரை தேரோட்டத்தின்போது தேர்தலை நடத்தினால் வாக்குப்பதிவு சதவீதம் பாதிக்கும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார். #Vaiko #ParliamentElection
மதுரை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகர்கோவிலில் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் கூட்டணி கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க செல்கிறேன். பாராளுமன்றத் தேர்தலோடு 21 சட்டமன்ற இடைத்தேர்தல்களையும் தமிழகத்தில் நடத்த வேண்டிய கடமை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.

வழக்குகள் நிலுவையில் இருக்கிறபோது இடைத்தேர்தல்கள் நடந்த முன்னுதாரணம் இருக்கும்போது தமிழகத்தில் 3 சட்டமன்றங்களுக்கு இடைத்தேர்தலை நடத்துவதை தள்ளிப்போடுவது சரியல்ல.

தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். பல லட்சம் பேர் பங்கேற்கிற சித்திரைத் திருவிழாவின்போது மதுரை பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதனால் வாக்குப்பதிவு சதவீதம் பாதிக்கும் என நான் கருதுகிறேன்.

18-ந் தேதி தேர்தலை நடத்தாமல் வேறு தேதியில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.



அகில இந்திய அளவில் பி.ஜே.பி. கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். பொள்ளாச்சி சம்பவம் குலை நடுங்க வைக்கிறது. அந்தக் குற்றத்தை செய்த கயவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் கூண்டில் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இந்தக் கயவர்கள் பின்னணியில் யார் இருந்தாலும், அவர்களைக் காப்பாற்ற யார் முனைந்து இருந்தாலும், அவர்களும் கண்டறியப்பட்டு, அவர்களும் சட்டத்தின் பிடியில் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

எடியூரப்பா பாராளுமன்றத் தேர்தலில் 22 தொகுதிகள் கர்நாடகாவில் வெற்றி பெற்றாலே, சட்டசபையையே மாற்றி அமைப்போம் என்பது போன்ற தவறான கருத்துக்களை அவ்வப்போது பேசி வருகிறார்.

அது மட்டுமா? சரிந்து கொண்டு இருந்த பி.ஜே.பி.யின் செல்வாக்கு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு வானுயர உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று அதனை வைத்து வாக்கு வங்கியை உயர்த்தலாம் என்று சொன்ன கருத்தும் அவர் கருத்தா? அல்லது பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தைப் பிரதிபலிக்கிறாரா? என்று தெரியவில்லை. ராணுவ வீரர்கள் அனைவரும் 120 கோடி இந்தியர்களுக்கும் சொந்தக்காரர்கள்.

மேற்கண்டவாறு அவர் கூறினார். #Vaiko #ParliamentElection



Tags:    

Similar News