செய்திகள்

பேனர்களை அகற்றக் கூறிய டிராபிக் ராமசாமியை தாக்க முயன்ற அரசியல் கட்சியினர்

Published On 2018-12-27 06:36 GMT   |   Update On 2018-12-27 06:36 GMT
திருவையாறு கடைவீதியில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை அகற்றக் கூறிய டிராபிக் ராமசாமியை அரசியல் கட்சியினர் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #trafficRamasamy

திருவையாறு:

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதிக்கு நேற்று மாலை டிராபிக் ராமசாமி காரில் வந்தார். திருவையாறு கடைவீதியில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் பேனர்களை கண்டவுடன் டிராபிக் ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அங்கிருந்த பேனர்களை தனது செல்போன் மூலம் படம் எடுத்துக்கொண்டு இருந்தார்.

இதுகுறித்த தகவல் அங்கு பரவியதால் திருவையாறு கடைவீதி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி கேள்விப்பட்டதும் திருவையாறு போலீசார், பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

அப்போது அங்கு பேனருக்காக வைக்கப்பட்டிருந்த கட்டைகளையும், கம்புகளையும் அகற்ற வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தெரிவித்தார். இதனால் பேரூராட்சி பணியாளர்கள் அந்த கட்டைகளை அப்புறப்படுத்த முயன்றனர்.

அப்போது அங்கு வந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், டிராபிக் ராமசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் டிராபிக் ராமசாமியை தாக்க முயன்றனர். உடனே அவருடன் வந்த பாதுகாப்பு போலீசார், டிராபிக் ராமசாமியை பத்திரமாக அவரது காருக்கு அழைத்து சென்றார்.

அப்போது டிராபிக் ராமசாமி ஆவேசமாக, என்னை தாக்க முற்பட்டவர்கள் மீதும், கொலை செய்வதாக கூறியவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டை செல்வேன் என்று கூறினார்.

இந்த சம்பவத்தால் திருவையாறு கடை வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து டிராபிக் ராமசாமி பாபநாசம் பகுதிக்கு சென்றார். ஆனால் அவர் வருவதை தகவல் அறிந்து பாபநாசம் கடை வீதியில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை போலீசாரே இரவோடு இரவாக அகற்றினர். #trafficRamasamy

Tags:    

Similar News