செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைக்கு மண் குத்தும் பயிற்சியளிக்கப்பட்டது.

அலங்காநல்லூர்-பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்

Published On 2018-12-04 05:01 GMT   |   Update On 2018-12-04 05:01 GMT
அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை தயார் செய்யும் பணிகளில் காளைகள் வளர்ப்போர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #Jallikattu
அலங்காநல்லூர்:

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று கிராமப்புறங்களில் நடைபெறும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு. இது 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இந்த வீர விளையாட்டு தை மாதத்தில் நடைபெறும்.

வருகிற ஜனவரி 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடை பெறுவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கிராம கமிட்டியினர் செய்து வருகின்றனர்.



இந்நிலையில் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கண்மாய்களில் நீச்சல் பயிற்சியும் மைதானங்களில் ஓட்டமும், மண்குவியலில் மண் குத்துதலும், மாதிரி வாடி அமைத்து அதில் காளைகளை அவிழ்த்து விடுவதும் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை காளைகள் வளர்ப்போர் அளித்து வருகின்றனர்.

அ.கோவில் பட்டியைச் சேர்ந்த மண்டு கருப்புச்சாமி கிராம கோவில் காளைக்கு அப்பகுதியில் உள்ள குளத்தில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் அலங்காநல்லூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் கூறியதாவது:-

பொதுவாக காளைகளுக்கு டிசம்பர், ஜனவரி மாதம் வந்தாலே தெம்பும், தைரியமும், துணிச்சலும் இயற்கையாகவே வந்து விடுகிறது. காளைகளுக்கு தீவனமாக பச்சை புல், வைக்கோல், முற்றிய தேங்காய் பருப்பு, நாட்டு பருத்தி விதை போன்ற பலவகையான தீவனங்கள் வழங்கி சிறப்பாக கவனிக்கப்படும்.

அத்துடன் அதற்கான பயிற்சிகளில் வழக்கம் போல் ஈடுபடுத்தப்படும். தென்மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் போட்டிகளில் பங்கேற்கும்.

ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முன்பே அனைத்து பகுதிகளிலும் காளைகள் வளர்ப்போர் ஆர்வத்துடன் பயிற்சி அளித்து முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றார். #Jallikattu



Tags:    

Similar News