செய்திகள்
முக ஸ்டாலினிடம் சேதம் பற்றி மீனவ பெண்கள் கதறி அழுது கூறிய காட்சி

பட்டுக்கோட்டையில் கஜா புயலால் பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு முக ஸ்டாலின் ஆறுதல்

Published On 2018-11-18 08:54 GMT   |   Update On 2018-11-18 08:54 GMT
பட்டுக்கோட்டையில் கஜா புயலால் பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆறுதல் கூறினார். #Gaja #GajaCyclone
பட்டுக்கோட்டை:

கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து உள்ளது. ‘கஜா’ புயல் சேத பகுதிகளை பார்வையிடுவதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார்.

நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கடற்கரைக்கு முதலில் முக ஸ்டாலின் சென்றார். அப்போது அவர், சேதம் அடைந்த பைபர் படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்படி உபகரணங்களை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்கிருந்த மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டார். நாகையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் வழியில் காரில் இருந்து இறங்கிய அவர், நாகை அக்கரைப்பேட்டை மீன் இறங்கு தளத்துக்கு சென்றார். அங்கு புயலால் சேதமடைந்து இருந்த மீன் இறங்கு தளத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். மேலும் புயல் காற்றால் ஒன்றோடொன்று மோதி சேதமடைந்த படகுகளையும் பார்வையிட்டார்.

பின்னர் அங்கிருந்து வேதாரண்யம் காந்திநகர் பகுதியில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட முக ஸ்டாலின், அங்கு உள்ள உயர்நிலை பள்ளியில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயல் பாதிப்புகளை நேரில் பார்க்கும்போது சில குறைகள் உள்ளதை பார்த்தேன். இந்த குறைகளை சொல்லித்தான் ஆக வேண்டும். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை யாரும் வந்து பார்க்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் தெரிவித்தனர். புயல் சேதம் அதிக அளவில் உள்ளது. இந்த சேத விவரங்களை ஊடகங்கள்தான் தெரியப்படுத்த வேண்டும்.

கஜா புயலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து பட்டுக்கோட்டை சிவக்கொல்லை பகுதியில் கஜா புயலால் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் பலியான சதீஷ் குமார், ரமேஷ்குமார், தினேஷ் குமார், அவரது உறவினர் அய்யாதுரை ஆகியோரது வீட்டுக்கு முக ஸ்டாலின் சென்றார். அங்கு 4 பேரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து பட்டுக்கோட்டை அருகே அணைக்காட்டில் தென்னை மரம் விழுந்ததில் பலியான ஜெயலெட்சுமி வீட்டுக்கு சென்று முக ஸ்டாலின் ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.
Tags:    

Similar News