ராமநாதபுரத்தில் பெய்த கனமழையால் சாலையில் குளம்போல் தேங்கியிருக்கும் மழைநீர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டது.
- விருதுநகரில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
ராமநாதபுரம்:
தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் நேற்று சாரல் மழை பெய்தது. இன்று அதிகாலை 3 மணிமுதல் பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதனால் முக்கிய வீதிகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள், அன்றாட பணிகளுக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.
ராமநாதபுரம் நகரம், பட்டிணம் காத்தான், பேராவூர் உட்பட சுற்று வட்டார கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலை, பழைய பேருந்து நிலையம், கீழக்கரை மேம்பால பகுதி, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குளம் போல் மழை நீர் தேங்கியது.
இதே போன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாலை முதலே விட்டுவிட்டு லேசான முதல் கனமழை பெய்து வருகிறது.
ராமேசுவரத்தில் நேற்று முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவதி அடைந்தனர். பஸ் நிலையம், முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டது.
மாவட்டத்தின் அதிகபட்ச மழையாக தங்கச்சிமடத்தில் 33 மி.மீ மழையும், பாம்பனில் 29 மில்லி மீட்டரும், ராமேசுவரத்தில் 27 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. ராமநாதபுரத்தில் 22 மில்லி மீட்டர் மழை இன்று காலை 6 மணி வரை பெய்துள்ளது.
விருதுநகரில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக சாரல் மழை பெய்ததால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மழையில் நனைந்தடி குடைகளை பிடித்தபடி சென்றனர். இன்று காலை முதல் பெய்யும் சாரல் மழையால் நகரில் குளிர்ந்த சீதோஷ்ன நிலை நிலவி உள்ளது.
அருப்புக்கோட்டை, சிவகாசி, பாலையம்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.