செய்திகள்

3 நாட்களாக இருளில் மூழ்கிய கிராமங்கள்: செல்போன் பவர் பேங்க், எமர்ஜென்சி லைட் அமோக விற்பனை

Published On 2018-11-18 08:23 GMT   |   Update On 2018-11-18 08:23 GMT
கஜா புயல் காரணமாக மூன்று நாட்கள் மின்சாரம் இல்லாததால் செல்போன் பவர் பேங்க், எமர்ஜென்சி லைட் அதிக அளவில் விற்பனையாகிறது. #Gaja #GajaCyclone
கோரதாண்டவம் ஆடிய கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டது. புயல் - மழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததாலும், மின்கம்பங்கள் சாய்ந்ததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அனைத்து துறை ஊழியர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் அன்றாட தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் ஆகியவை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்த போதிலும் கடந்த 3 நாட்களாக மின் இணைப்பு கிடைக்காமல் 100-க்கும் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

தஞ்சையில் ஒரு சில இடங்களில் மின்சார கம்பங்கள் சீரமைக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மின் ஊழியர்கள் மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஊழியர்கள் தஞ்சைக்கு வரவழைக்கப்பட்டு மின் கம்பங்கள் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கஜா புயலில் மின்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் வீடுகள் 3 நாட்களாக இருளில் மூழ்கி உள்ளன. எப்போதும் மக்கள் கைகளில் இருக்கும் செல்போன்கள் சார்ஜ் போட வசதி இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கும் நிலை நீடித்து வருகிறது.

தஞ்சை நகரத்தில் பெரும்பாலானவர்களின் செல்போன்கள் சார்ஜ் போட வசதி இல்லாமல் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் அவர்கள் செல்போன்களுக்கு சார்ஜ் செய்ய பவர் பேங்குகளை வாங்க கடைகளில் திரண்டனர்.

செல்போன் வசதி இருந்தால் மட்டும் எந்த தகவல்களையும் மற்றவர்களுக்கு பரிமாற முடியும். மேலும் ஏதாவது ஆபத்து என்றால் கூட உதவிக்கு மற்றவர்களை அழைக்க முடியும் என்பதால் செல்போனில் சார்ஜ் வைத்திருப்பது இந்த தருணத்தில் அவசியமாக உள்ளது.

இதையொட்டி தஞ்சை பர்மா பஜாரில் உள்ள கடைகளில் நேற்று மக்கள் அதிக அளவில் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் பவர் பேங்குகளை வாங்கி சென்றனர். பவர் பேங்குகளை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு கடைக்காரர்கள் அவர்களது செல்போனில் சார்ஜ் ஏத்தி விட்டும், அவர்கள் வாங்கி செல்லும் பவர் பேங்கில் சார்ஜ் முழுமையாக ஏத்தி விட்டும் விற்பனை செய்தனர்.

இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, மக்கள் அவர்கள் பகுதியில் மின் இணைப்பு இல்லை என்பதால்தான் பவர் பேங்க் வாங்கி செல்கின்றனர். இதனால் எங்களால் முடிந்த உதவியாக அவர்கள் செல்போனுக்கும், வாங்கி செல்லும் பவர் பேங்குக்கும் சார்ஜ் நிரப்பி கொடுக்கிறோம் என்றனர்.

இதேபோன்று மின்சாரம் இல்லாமல் பேட்டரியில் இயங்கும் எமர்ஜென்சி லைட்டுகளும் தஞ்சையில் அதிகமாக விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News