விருத்தாசலம்-சிதம்பரம் பகுதியில் பலத்த மழை- குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது
விருத்தாசலம்:
விருத்தாசலம் பகுதியில் புயலின் காரணமாக நேற்று மாலையில் இருந்து மழை பெய்து வருகிறது. மேலும் நேற்று இரவு முழுவதும் காற்று பலமாக வீசியது. விருத்தாசலம் பகுதியில் பெய்த மழை அப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
நகரப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் மழை நீரும் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. விருத்தாசலம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் மழை நீர் சூழ்ந்திருக்கிறது.
அப்பகுதியில் அருகில் உள்ள வீடுகளில் இருந்து வெளிவரக்கூடிய கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் பள்ளி வளாகத்தில் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் அப்பகுதி மக்கள் மாடுகளை கட்டி வைத்துள்ளனர். மாடுகளின் கழிவால் பள்ளி வளாகத்தில் துர்நாற்றம் வீசி வருகிறது. பள்ளி வளாகத்தில் மழைநீர், கழிவுநீர் தேங்கி நிற்காமல் இருக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருத்தாச்சலம் பஸ் நிலையம் கடைவீதி பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது.
விருத்தாசலம் பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளது. மேலும் சரி வர தூர் வாரப்பட வில்லை. இதனால் மழைநீர் செல்லும் வாய்க்கால்களில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாய நிலங்களில் பொழிய கூடிய மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாமல் நிலங்களிலேயே தேங்கி நிற்கிறது. தற்போதைய சம்பா சாகுபடி நிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. விருத்தாச்சலம் புறவழிச்சாலையில் மணவாளநல்லூர் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் சுமார் 100க்கும் மேற்பட்ட ஹெக்டேர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதேபோல விருதாச்சலம் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகள் அனைத்திலும் மழைநீர் வெளியேற வழி இல்லாததால் ஆங்காங்கே விளை நிலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. #heavyrain #gajacyclone