செய்திகள்

7-ம் வகுப்பு பாடத்தில் முத்துராமலிங்கதேவர் வரலாறு சேர்க்கப்படும் - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

Published On 2018-11-10 03:10 GMT   |   Update On 2018-11-10 03:10 GMT
அடுத்த கல்வி ஆண்டில் 7-ம் வகுப்பு பாடத்தில் முத்துராமலிங்கதேவர் வரலாறு சேர்க்கப்படும் என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்தது. #MuthuramalingaThevar #History
மதுரை:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சங்கிலி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நேதாஜி சுபாஷ் சந்திரபோசுடன் இணைந்து இந்திய விடுதலைக்காக போராடி சிறை சென்றவர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். தனது சொத்துக்களை விற்று ஏழை மக்களுக்கு வழங்கியவர். அவருடைய பிறந்தநாள் விழா அரசு சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

அவரது வரலாற்றை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி பாடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு திடீரென பள்ளி பாடங்களில் இருந்து முத்துராமலிங்கதேவர் வாழ்க்கை வரலாறு நீக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசிடம் முறையிட்டோம்.

இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே முத்துராமலிங்கதேவர் வாழ்க்கை வரலாற்றை தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.



அப்போது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2019-2020-ம் கல்வி ஆண்டில் 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கதேவர் வரலாறு சேர்க்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.  #MuthuramalingaThevar #History  #TNGovernment
Tags:    

Similar News