செய்திகள்

பஸ், ரெயிலில் இடம் கிடைக்காததால் விமான பயணத்துக்கு மாறிய பயணிகள்

Published On 2018-11-05 06:56 GMT   |   Update On 2018-11-05 06:56 GMT
பஸ் மற்றும் ரெயில்களில் இடம் கிடைக்காததாலும் போக்குவரத்து நேரம் குறைவு, சொகுசு பயணம் என்பதாலும் விமான பயணத்தை ஏராளமான பயணிகள் தேர்வு செய்து இருக்கிறார்கள்.
ஆலந்தூர்:

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் தங்கி இருக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.

ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே முடிந்து விட்டதால் பஸ்களை பொதுமக்கள் நாடி வருகிறார்கள். இதனால் அரசு சிறப்பு பஸ்கள், ஆம்னி பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரெயில்களில் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் நின்று கொண்டே பயணம் செய்யும் நிலையும் உள்ளது.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில ஆம்னி பஸ்களில் ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் டிக்கெட் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏராளமான பயணிகள் விமான பயணத்துக்கு மாறி உள்ளனர். போக்குவரத்து நேரம் குறைவு, சொகுசு பயணம் என்பதால் விமான பயணத்தை ஏராளமானோர் தேர்வு செய்து இருக்கிறார்கள்.

சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை, சேலத்துக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தூத்துக்குடிக்கு 5 முறையும் மதுரை-10, திருச்சி-6, கோவை-14, சேலம்-2 முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தற்போது இந்த விமானங்கள் அனைத்திலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் எந்த விமானங்களிலும் டிக்கெட்டுகள் இல்லை.

சில விமானத்தில் மட்டும் உயர் வகுப்பு டிக்கெட்டுகள் உள்ளன. அவை ரூ.19 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதிலும் சிலர் பயணம் செய்கிறார்கள்.

எனவே வரும் பண்டிகை காலங்களில் பஸ், ரெயிலில் செல்வதை விட விமான பயணத்தை பெரும்பாலானோர் தேர்வு செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News