செய்திகள்

புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் சிறைப்பிடிப்பு- இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2018-10-23 04:44 GMT   |   Update On 2018-10-23 04:44 GMT
எல்லை தாண்டி வந்ததாக கூறி 5 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TNFishermen
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 132 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த செல்வம் (வயது 47), சின்னையா (50), சுப்பிரமணி (45), மாரிமுத்து (38), பானி (30) ஆகிய 5 பேரும் ஒரு விசைப்படகில் கடலுக்கு சென்றிருந்தனர்.

அவர்கள் நேற்று மாலை 3.30 மணியளவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே சுமார் 30 நாட்டிக்கல் தொலைவில் வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு இலங்கை ராணுவத்திற்கு சொந்தமான குட்டி ரோந்து படகு மின்னல் வேகத்தில் வந்தது. அதிலிருந்த கடற்படை வீரர்கள் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் ஒருசில படகுகளை சுற்றி வளைத்தனர். உடனடியாக மற்ற படகுகளில் இருந்த மீனவர்கள் வலைகளை வாரி சுருட்டிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

ஒரு படகை மட்டும் மறித்த இலங்கை கடற்படை வீரர்கள் அதிலிருந்த மீனவர்களை சிறைப்பிடித்தனர். நீங்கள் மீன் பிடித்தது எங்கள் நாட்டிற்கு சொந்தமான பகுதி என்று கூறினர். எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக படகில் இருந்த செல்வம் உள்பட 5 மீனவர்களையும் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால் உள்ளிட்ட மீன்களையும் அபகரித்துக் கொண்டனர். பின்னர் அவர்களையும், விசைப்படகையும் இலங்கைக்கு கொண்டு சென்றனர். இரவு அங்குள்ள காரைநகர் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தினர். இன்று காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்களா? அல்லது விடுதலையாவார்களா? என்பது பிற்பகலில் தெரிய வரும்.

டீசல் விலை உயர்வை கண்டித்து சுமார் 2 வார கால வேலை நிறுத்த போராட்டம், இயற்கை சீற்றம் என மீனவர்கள் வாழ்க்கை முடங்கி போய் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்றனர். அதற்குள் 5 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TNFishermen
Tags:    

Similar News