செய்திகள்

ஆம்னி பஸ் டிரைவரால் தான் விபத்து ஏற்பட்டது- உயிர்தப்பிய பயணிகள் பேட்டி

Published On 2018-10-19 16:15 GMT   |   Update On 2018-10-19 16:15 GMT
உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி டிரைவர் பஸ்சைஅதிவேகமாக ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டதாக உயிர் தப்பிய பயணிகள் கூறியுள்ளனர்.
விழுப்புரம்:

உளுந்தூர்பேட்டை அருகே டேங்கர் லாரி மீது பஸ் மோதியதில் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் இருந்த 13 பேர் ஜன்னலை உடைத்துக்கொண்டு கீழே குதித்து உயிர்தப்பினர்.

இந்தவிபத்து குறித்து உயிர்தப்பிய பயணிகள் கூறியதாவது:-

பஸ் சென்னையில் இருந்து புறப்பட்டபோதே பஸ்சின் டிரைவர் பஸ்சை அதிவேமாக ஓட்டி சென்றார். இதனால் நாங்கள் அச்சத்துடன் பயணம் செய்தோம்.

சில பயணிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் லாரி மீது பஸ் டமார் என்று மோதியது. சிறிது நேரத்தில் லாரியும், பஸ்சும் தீ பிடிக்க தொடங்கியது.

இதில் நாங்கள் அனைவரும் கூச்சல் போட்டு அலறினோம். பின்னர் ஜன்னலை உடைத்து கீழே குதித்து உயிர்தப்பினோம். பஸ் டிரைவர் வேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டது.

ஆம்னி பஸ் டிரைவர்கள் அனைவரும் மின்னல்வேகத்தில் ஓட்டிசெல்வதால் விபத்து ஏற்படுகிறது. எனவே மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆம்னி பஸ்களை ஆய்வு செய்ய வேண்டும். வேகமாக ஓட்டும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் இந்த விபத்து குறித்து அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

அஜீஸ்நகர் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதற்கு காரணம் அங்குள்ள வளைவு பகுதியில் செல்லும்போது பஸ் டிரைவர்கள் அதிவேகமாக செல்கிறார்கள். இதனால் டிரைவர்களின் கட்டப்பாட்டை இழந்து பஸ்கள் விபத்துக்குள்ளாகிறது.

மேலும் அந்த பகுதியில் மின்விளக்கும் எரிவதில்லை. இதனால் இரவில் வரும் வாகனங்கள் அந்த பகுதியில் விபத்தில் சிக்கிக்கொள்கிறது.

எனவே அந்த பகுதியில் மின்விளக்கு அமைக்க வேண்டும். மேலும் ஆம்னி பஸ்களை வேகமாக ஓட்டி வரும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
Tags:    

Similar News