செய்திகள்
பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் பஸ்சையும் பயணிகளை பொதுமக்கள் மீட்டதையும் படத்தில் காணலாம்.

கடம்பூர் அருகே ரோட்டோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது- வாலிபர் பலி

Published On 2018-09-17 11:26 GMT   |   Update On 2018-09-17 11:26 GMT
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே ரோட்டோர பள்ளத்தில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வனப்பகுதி காடகநல்லிக்கு தனியார் பஸ் ஒன்று இன்று காலை புறப்பட்டு சென்றது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

காடகநல்லிக்கு பஸ் சென்று அங்கிருந்து மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தது.

பசுவணாபுரம் அருகே ஒரு வளைவில் பஸ் திரும்பிய போது எதிர்பாராத வகையில் டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி ரோட்டோர பள்ளத்தில் பஸ் திடீரென கவிழ்ந்தது.

பஸ் கவிழ்ந்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ... அம்மா.. என அபாய குரலிட்டனர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் ஓடி சென்று இடிபாட்டுக்குள் சிக்கி தவித்த பயணிகளை மீட்டனர்.

சம்பவ இடத்துக்கு போலீசாரும் விரைந்து வந்தனர். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் பெயர் ஊர் விவரம் உடனடியாக தெரியவில்லை.

மேலும் இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி பகுதிகளில் இருந்து ஆம்புலன்சுகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. படுகாயத்துடன் துடித்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News