செய்திகள்

கருணாநிதி உடல்நிலை: நாராயணசாமி, இளங்கோவன், ஜி.கே.வாசன் விசாரித்தனர்

Published On 2018-08-07 08:17 GMT   |   Update On 2018-08-07 08:17 GMT
கருணாநிதியின் உடல் நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக புதுச்சேரி முதல்- அமைச்சர் நாராயணசாமி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜி.கே.வாசன் ஆகியோர் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். #KarunanidhiHealth #KauveryHospital
சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் காவேரி ஆஸ்பத்திரியில் குவிந்துள்ளனர்.

கருணாநிதியின் உடல் நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக புதுச்சேரி முதல்- அமைச்சர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து உடல் நலம் விசாரித்தனர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் குடும்பத்தினர் கருணாநிதியின் உடல்நிலை பற்றிய விவரங்களை தலைவர்களிடம் எடுத்துக் கூறினார்கள். ஆஸ்பத்திரியில் உடல் நலம் விசாரித்த பிறகு தலைவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:- கலைஞர் உடல் நிலை குறித்து நேற்று வெளியான மருத்துவ அறிக்கை கவலை தருவதாக இருந்தது. இன்று அவருடைய உடல் நிலை குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் குடும்பத்தினரிடம் கேட்டு அறிந்தேன்.

கலைஞர் அவருடைய மனோதைரியம், நெஞ்சுறுதி ஆகியவற்றால் மீண்டும் நலம் பெற்று வருவார் என்று நம்புகிறேன். தமிழகத் தில் உள்ளவர்கள் மட்டுமல்ல உலகத்தமிழர்கள் அனைவருக்கும் பாதுகாவலரான அவர் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.


ஜி.கே.வாசன்:- தமிழர்களின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் கலைஞர். இன்று உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருக்கிறார். உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. என்றாலும் உயர்தர மருத்துவ சிகிச்சையால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வீடு திரும்புவார்.

மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினரிடம் கலைஞர் உடல் நலம் பற்றி கேட்டு அறிந்தேன். உடல் நலம் பெற்று வருவார் என்று நம்புகிறேன். மீண்டும் நல்ல நிலைக்கு வர இறைவனை வேண்டுகிறேன்.


விக்கிரமராஜா:- இந்தியாவில் உள்ள வணிகர் நல்வாழ்வுக்காக பல்வேறு முன் மாதிரி திட்டங்களை தமிழகத்துக்கு தந்தவர் கலைஞர். நெருக்கடியான கால கட்டத்தில் அவர் இருக்கிறார். என்றாலும், பழைய நிலைக்கு திரும்புவார் என்று நம்புகிறேன். அவர் மீண்டும் பழைய நிலையை அடைய வேண்டும் என்று இந்தியாவில் உள்ள அனைத்து வணிகர்களும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறோம். அதை ஏற்று இந்தியா முழு வதும் வணிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.

பேட்டியின்போது வணிகர்கள் பேரவை நிர்வாகி பாண்டியராஜன் உடன் இருந்தார். #KarunanidhiHealth #KauveryHospital
Tags:    

Similar News