'பராசக்தி' பட வெளியீட்டிற்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
- பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படத்திற்கு தடைவிதித்தால் பெருத்த இழப்பு ஏற்படும்
- அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட முறையில் தாக்கல் செய்ய வேண்டும்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ள படம் 'பராசக்தி'. இப்படம் முதலில் பொங்கலை முன்னிட்டு ஜன.14ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், பின் ஜன.10க்கு மாற்றப்பட்டது. இதனிடையே தனது 'செம்மொழி' என்ற கதையை திருடி இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி, வெளியீட்டிற்கு தடைவிதிக்க கோரி இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், தன் கதையை பல தயாரிப்பாளர்களிடம் கொடுத்தபோது, தயாரிப்பாளர் சேலம் தனசேகரன், கதையை நடிகர் சூர்யாவிடம் கொடுக்க, அவர் அதை இயக்குனர் சுதா கொங்கராவிடம் கொடுத்ததாக கூறியிருந்தார். மேலும் தனது கதையை திருடி பராசக்தி படம் எடுக்கப்பட்டுள்ளதாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் 2025 ம் ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் படத்தை வெளியிட இடைக்கால தடைவிதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதொடர்பாக இயக்குநர் சுதா கொங்கரா, தயாரிப்பாளர் ஆகியோர் ஜன.2ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில், கதை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது இணை இயக்குநர் ராஜேந்திரன் எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என 'பராசக்தி' தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படத்திற்கு தடைவிதித்தால் பெருத்த இழப்பு ஏற்படும் என்ற வாதத்தையும் முன்வைத்தது.
இதனைக்கேட்ட நீதிபதி பட வெளியீட்டிற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் முந்தைய உத்தரவின்படி அறிக்கையை இதுவரை தாக்கல் செய்யவில்லை என்பதால், அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.