செய்திகள்

திருச்சிக்கு இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆமைகள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்டது

Published On 2018-07-28 07:52 GMT   |   Update On 2018-07-28 07:52 GMT
இலங்கையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட நட்சத்திர ஆமைகள் இன்று காலை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. #TrichyAirport
கே.கே.நகர்:

இலங்கை தலைநகரான கொழும்புவில் இருந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது மத்திய வான் நுண்ணறிவு பிரிவுஅதிகாரிகள் விமானத்தை பரிசோதனை செய்த போது ஒரு இருக்கைக்கு அடியில் ஒரு பெட்டி கிடந்தது.

பெட்டியை உரிமைகோரி யாரும் வரவில்லை. இதனால் அதிகாரிகள் கேட்பாரற்று கிடந்த பெட்டியினை பறிமுதல் செய்து திறந்து பார்த்தனர். அப்போது அதில் சுமார் 22 கிலோ நட்சத்திர ஆமைகள் இருந்தது. உடனே அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.

பின்பு விசாரணை நடத்தியதில் அந்தப் பெட்டியை யார் வைத்தார்கள் என்று கண்டு பிடிக்க முடியாத நிலை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த ஆமைகளை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அப்போது வனத்துறையினர் அந்த ஆமைகளை பரிசோதனை செய்தபோது அந்த ஆமைகளின் மீது வைரஸ் கிருமி இருப்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து அதற்கான ஆவணங்கள் அனைத்தும் வைத்து மீண்டும் இலங்கை நாட்டிற்கு இன்று காலை விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டது. ஆமைகள் மருந்துக்காக கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. #TrichyAirport
Tags:    

Similar News