செய்திகள்

பாசப்பிணைப்பு கொண்ட கட்சி அ.தி.மு.க. - அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2018-07-20 11:07 GMT   |   Update On 2018-07-20 11:07 GMT
அ.தி.மு.க. ஒரு பாசப்பிணைப்பு கொண்ட கட்சி என்று மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். #ADMK #SellurRaju
மதுரை:

மதுரை மாநகர் மாவட்டம் மேற்கு, மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் வட்டச் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

நாட்டில் 3-வது பெரிய கட்சியாக அ.தி.மு.க. திகழ்ந்து வருகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இயக்கத்தினரையும், அரசையும் வலிவோடும், பொலிவோடும் நடத்தினார்.

இப்போது ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பான ஆட்சி செய்து வருகிறார்கள்.

எனவே அ.தி.மு.க.வில் மேலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதற்காக வட்டச் செயலாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் அயராது பணியாற்ற வேண்டும்.

இந்த அரசை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கங்கணம் கட்டி செயல்படுகிறது. அது எடுபடாது.

இந்த அரசின் மீது வீண்பழி போடுவதையே எதிர்க்கட்சிகள் வேலையாக செய்து வருகிறது.

தொழில் செய்பவர்கள் வரி கட்டாவிட்டால் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. அதை கூட இந்த அரசு மீது எதிர்க்கட்சிகள் திசை திருப்பப் பார்க்கிறது.

இதனை வாக்காளர்கள் மத்தியில் எடுத்துக்கூறி பொய் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும்.

அ.தி.மு.க. எப்போதும் தேர்தல்களுக்கு பயப்படும் இயக்கம் அல்ல. எந்த நேரம் தேர்தல் வந்தாலும் நாம் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

இளைஞர்களின் எதிர் காலம் அ.தி.மு.க.வில் மட்டும் பிரகாசமாக இருக்கும். உழைப்பவர்களுக்கு பதவிகள் தேடிவரும்.

எனவே மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் அ.தி.மு.க.வில் ஆர்வத்துடன் சேர்ந்து வருகிறார்கள். அ.தி.மு.க. ஒரு பாசப்பிணைப்பு கொண்ட கட்சி ஆகும். அ.தி.மு.க. தமிழக மக்களின் உரிமைகளை பேணி பாதுகாக்க தொடர்ந்து பாடுபடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட நிர்வவாகிகள் துரைப் பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, நிர்வாகிகள் எம்.எஸ்.பாண்டியன், கிரம்மர் சுரேஷ், திரவியம், பரவைராஜா, பகுதி செயலாளர்கள் கருப்பசாமி, மாரியப்பன், பூமிபாலகன், நிர்வாகிகள் தமிழ்செல்வன், முத்துராமலிங்கம், புதூர் மோகன், கறிக்கடை முத்துக்கிருஷ்ணன், பஜார் துரைப்பாண்டியன், தேவதாஸ், எஸ்.எம்.டி.ரவி, பழனிநத்தம் ராஜாராம், முன்னாள் கவுன்சிலர்கள் லட்சுமி, தாஸ், கலாவதி, முருகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இன்று மாலை 6 மணிக்கு மதுரை மாநகர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News