செய்திகள்

கல்வீச்சு- மோதல்: தினகரன் ஆதரவாளர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு

Published On 2018-07-20 09:26 GMT   |   Update On 2018-07-20 09:26 GMT
தண்டையார்பேட்டையில் மதுசூதனன்-தினகரன் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக தினகரன் ஆதரவாளர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Madhusudhanan #TTVDhinakaran
ராயபுரம்:

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை இரட்டை குழி தெருவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வந்தார்.

அப்போது மதுசூதனன் ஆதரவாளர்கள் என அ.தி.மு.க. தொண்டர்கள் 20 ரூபாய் நோட்டுகளை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தினகரன் ஆதரவாளர்களுக்கும், மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். பாட்டில்கள் மற்றும் செருப்புகளும் வீசப்பட்டன.

இந்த மோதலில் மதுசூதனன் ஆதரவாளர்கள் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தினகரன் ஆதரவாளர்கள் 8 பேர் காயமடைந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கல்வீச்சில் காயம் அடைந்த பெண் இன்ஸ்பெக்டர் பிரேமா தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினார்கள். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இருக்கும் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மோதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறார்கள்.

இது தொடர்பாக தினகரன் ஆதரவாளர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துமீறி பொது இடத்தில் கூடுவது, கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், தகாத வார்த்தைகளால் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Madhusudhanan #TTVDhinakaran
Tags:    

Similar News