செய்திகள்

முட்டை ஊழல் அணுகுண்டாக மாறும்- டி.டி.வி.தினகரன்

Published On 2018-07-09 09:55 GMT   |   Update On 2018-07-09 09:55 GMT
முட்டை ஊழல் அணுகுண்டாக மாறும் என்று கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
கோவை:

கோவை மாநகர் தெற்கு, வடக்கு, கோவை புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கோவை கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக தாயாய், தோழியாய், தந்தையாய் இருந்த சசிகலா சொன்ன காரணத்தினால் தான் மீண்டும் அ.திமு.க. ஆட்சி தொடருகிறது.

சசிகலா நினைத்திருந்தால் என்னை முதல்வராக ஆக்கி விட்டு சென்றிருக்க முடியும். ஆனால் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவரை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இன்றைக்கு முதல்வராக இருக்கும் பழனிசாமியை நியமித்த காரணத்தினால் தான் அவர் முதல்வராக இன்று இருக்கிறார்.

இன்று முதல்வராக இருக்கிற பழனிசாமியின் தாய் -தந்தை கூட அவரை முதல்வராக்கவில்லை. அவரை அமைச்சராக்கிய ஜெயலலிதா கூட அவரை அமைச்சராக தான் வைத்திருந்தாரே தவிர அவரை தாயை விட உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கக் கூடிய சசிகலாவை அவர் யாருக்கோ பயந்து கொண்டு கட்சியை விட்டு நீக்கிய காரணத்தினால் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி உருவானது. இந்த பகுதியை சேர்ந்த ஒரு அமைச்சர் சொல்கிறார். ஒரு தினகரன் அல்ல. ஆயிரம் தினகரன் வந்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்கிறார்.

இந்த ஒரு தினகரனையே ஆர்.கே.நகரில் எதிர்கொள்ள முடியவில்லை. உங்களுக்கு இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயர் கொடுக்கப்பட்டது. ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் இருந்தது. காவல் துறையையும், அரசு எந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன ஆட்டம் போட்டீர்கள் என்று தமிழக மக்களுக்கு தெரியும்.

அந்த ஒரு தினகரனை ஆர்.கே.நகரில் எதிர்கொள்ள முடியாத நீங்கள் ஆயிரம் தினகரனை எப்படி சமாளிக்க போகிறீர்கள்.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவை கர்நாடகத்துக்கு விரட்டி விடலாம் என்று நினைத்தனர். ஆனால் அப்போது அவருக்கு பாதுகாப்பு அளித்த காரணத்தினால் தான் 1999-ம் ஆண்டு என்னை பெரிய குளம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட செய்தார். நான் ஒன்றும் புறவழியில் வந்தவன் அல்ல. நான் பெரிய குளம் தேர்தலில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் என்னை பேரவை மாநில செயலாளராக நியமித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வந்தேன்.

அப்போது என்னிடம் திருப்பூர் சிவசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் இந்த பகுதி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அவரது தந்தை கட்சியில் இருக்கிறார். எனவே அவருக்கும் கட்சி பொறுப்பு வழங்க வேண்டும் என்று சிவசாமி என்னிடம் சொன்னார்.

முன்னாள் மத்திய மந்திரி ஒருவர் எங்கள் குடும்பத்தை நீதிமன்றத்தில் தூணுக்கு தூண் அலைய விடுவோம் என்று சொன்னார். ஆனால் அவர் குடும்பத்தினர் தான் தற்போது நீதிமன்றத்தில் தூணுக்கு தூண் அலைந்துகொண்டிருக்கிறார்கள். நான் சிறைக்கு சென்றேனா? என்று சிலர் கேட்கிறார்கள். என்னை மாமியார் வீட்டுக்கு போகப்போகிறேன் என்று கூறுகிறார்கள். மாமியார் வீட்டுக்கு யார் போகப்போகிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். திருச்செங்கோட்டிலும், ராசிபுரத்திலும் வருமானவரி சோதனை ஆரம்பித்து விட்டது. முட்டை ரூபத்தில் வந்து இருக்கிறது. இந்த முட்டை அணுகுண்டாக மாறி உங்கள் துரோகத்தின் மீது விழும். உங்களுக்கு கட்டளையிட்டவர்களுக்கு தெரியாதா? தன்னை முதல்வராக்கியவருக்கே தாய் ஸ்தானத்தில் இருப்பவருக்கே துரோகம் செய்த நீங்கள் என்ன செய்வீர்கள் என்று அவர்களுக்கு தெரியாதா?


இந்த பகுதியை சேர்ந்த 56 பேரை போலீசார் பொய்வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு காரணமானவர்களை நீங்கள் மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன். உப்பை தின்றவர்கள் நிச்சயம் தண்ணீர் குடிக்கும் காலம் ஆரம்பித்து விட்டது. இதுபோன்ற சோதனைகள் நிச்சயம் உண்மையை வெளிக்கொண்டு வரும். மடியில் கனத்தோடு கடந்த ஆண்டு என்னை அரசியலில் இருந்து வெளியேற சொன்னவர்கள் அரசியலில் இருந்தே வெளியேற்றப்படுவார்கள். அந்த காலம் வர இருக்கிறது. நான் நினைத்திருந்தால் 2001-ம் ஆண்டு ஜெயலலிதாவிடம் சொல்லி முதல்வராகியிருக்க முடியும். ஆனால் மற்றவர்களை முதல்வராக்கும் பெருந்தன்மை படைத்தவர்கள் தான் நானும், சசிகலாவும்.

கூடா நட்பு கேடாய் முடியும் என்பார்கள். இன்றைக்கு துணை முதல்-அமைச்சராக இருப்பவர் எவ்வளவு கேவலப்படுத்தப்படுகிறார் என்று எல்லோருக்கும் தெரியும். இதை விட ஒரு தண்டனை அவருக்கு தேவையில்லை.

234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி மறைந்த எம்.ஜிஆர். ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு, சசிகலா கட்டளையோடு வெற்றி பெற்று அவர் அனுமதித்தால் அங்கே போய் அமருவேன். இல்லை என்றால் என்றைக்கும் உங்களோடு பணி செய்கின்ற தொண்டனாகத் தான் தொடருவேனே தவிர பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக கண்டவர் காலை பிடிப்பவன் அல்ல நான்.

18 எம்.எல்.ஏ.க்களும் நிரபராதிகள் என்ற ஒரே தீர்ப்போடு நீதிமன்றத்துக்கு வருவார்கள். அப்போது சட்டமன்றம் காலி செய்யப்படும். மக்களுக்காகத் தான் திட்டங்களே தவிர திட்டங்களுக்காக மக்கள் அல்ல. ஜனநாயக நாட்டில் மக்கள் விரும்பாத எந்த திட்டமாக இருந்தாலும் அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி அதை எதிர்த்து மக்கள் போரிட்டால் அவர்களுக்கு உறுதுணையோடு இருந்து போராடுவோம்.

18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்த பிறகு சட்டசபையில் அறுதி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அதில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் நிச்சயம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சியில் அமரும். 200 தொகுதிகளுக்கு மேல் நாங்கள் வெற்றிபெறுவோம்.

இரட்டை சிலை சின்னம் துரோகிகள் கையில் சென்று விட்டதால் அந்த துரோகிகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பதற்காக தமிழகம் முழுவதும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார்.

முன்னதாக டி.டி.வி. தினகரனுக்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சண்முகவேலு, பழனியப்பன், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் சிவசாமி, கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். #TTVDhinakaran
Tags:    

Similar News