செய்திகள்

சேலம் அருகே டிரான்ஸ்பார்மரில் பயங்கர தீ விபத்து

Published On 2018-06-08 11:20 GMT   |   Update On 2018-06-08 11:20 GMT
சேலம் அருகே இன்று டிரான்ஸ்பார்மரில் பயங்கர தீ விபத்து பெரும் விபத்து ஏற்பட்டது. உரிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூரில் மத்திய அரசுக்கு சொந்தமான ‘பவர் கிரிப்ட்’ உள்ளது. இதேப்போல் அப்பகுதியில் தமிழ்நாடு மின்பகிர்மான வட்டத்திற்கு சொந்தமான ‘பவர்ஹவுஸ்’ உள்ளது.

இந்த துணை மின்நிலையத்திற்கு மேட்டூர் அனல் மின்நிலையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி பவர் ஸ்டேசன் ஆகிய இடங்களில் இருந்து டவர்கள் மூலம் உயர் அழுத்த மின்சாரம் கொண்டு வந்து சேமித்து வைத்து சேலம் மாநகரின் சில பகுதிகளுக்கும் கே.ஆர்.தோப்பூர், தாரமங்கலம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கும் மின்விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த துணை மின்நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர்களில் ஒன்று சில நாட்களுக்கு முன்பு பழுதானது. இதனால் கடந்த ஒருவாரகாலமாக பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் டிரான்ஸ்பார்மர் இயக்கப்பட்டது. இன்று காலை 8.30 மணி அளவில் இந்த டிரான்ஸ்பார்ம் திடீரென தீப்பிடித்து குபு, குபுவென கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது.

இதனை தொடர்ந்து துணைமின்நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் மின் விநியோகம் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டது. தீ விபத்து குறித்து இரும்பாலை, ஓமலூர், சூரமங்கலம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் 5 வாகனங்களில் கொண்டு வந்த தண்ணீரை டிரான்ஸ்பார்மரில் பீய்ச்சி அடித்து தீ முழுவதையும் அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இங்கிருந்து சற்று தொலைவில் தான் தமிழக மின்வாரிய ஊழியர்களுடைய குடியிருப்புகள் உள்ளன. இங்கு செயற் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பலர் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார்கள். டிரான்ஸ் பார்மர் தீப்பிடித்து எரிவதை அறிந்தவுடன் அவர்கள் வெடித்து விடுமோ? என பீதி அடைந்தனர். இந்த டிரான்ஸ்பார்மரின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும். இது வெடித்து இருந்தால் பெரிய அளவில் விபத்து நேரிட்டு இருக்கும். ஏனெனில் இதன் பக்கத்தில் ஏராளமான டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. மேலும் அருகில் மத்திய அரசுக்கு சொந்தமான பவர் கிரிப்ட் மற்றும் மின்வாரிய குடியிருப்புகள் உள்ளது. உரிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். #Tamilnews
Tags:    

Similar News