செய்திகள்
இறந்த ஜல்லிக்கட்டு காளையை படத்தில் காணலாம்.

புதுக்கோட்டை அருகே மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடுத்து வந்த ஜல்லிக்கட்டு காளை இறந்தது

Published On 2018-06-08 10:35 GMT   |   Update On 2018-06-08 10:35 GMT
புதுக்கோட்டை அருகே பல்வேறு பரிசுகளை வென்று மாடுபிடி வீரர்களுக்கு சவால் விடுத்து வந்த ஜல்லிக்கட்டு காளை இறந்த சம்பவம் கிராமத்தையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தொடங்கியதில் இருந்து தற்போது வரை பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலேயே அதிக அளவிலான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான். அரசின் சட்ட விதிகளின்படி நடந்து வரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வீரமிகு, பயிற்சி பெற்ற ஏராளமான காளைகள் பங்கேற்று வருகின்றன. அதே போல் மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் பழனியாண்டி என்பவரின் காளை பங்கேற்று பிடிபடாமல் பல்வேறு பரிசுகளை பெற்று வந்தது. குறிப்பாக விராலிமலை, ராப்பூசல், திருநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று பிடிபடாமல் சைக்கிள், பீரோ, தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் என பல பரிசுகளை பெற்றது.

இந்த காளையை வாடி வாசலில் அவிழ்த்து விடும் போது பல வீரர்கள் தங்களால் இந்த காளை அடக்க முடியுமா? என்ற கேள்விதான் முன்னோக்கி நிற்கும். அந்த அளவிற்கு காளையின் திமில்கள் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருக்கும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த காளைக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து காளையின் உரிமையாளர் தேவையான மருத்துவம் பார்த்து சிகிச்சை அளித்து வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி காளை இறந்தது.

உடல்நலக்குறைவால் இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்திய காட்சி.

இதையடுத்து கிராமத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சத்தியமங்கலம் கிராமத்தில் திரண்டனர். மேலும் பெண்கள் சுற்றி நின்று ஒப்பாரி வைத்து அழுதனர். இதனை பார்த்தவர்கள் மிகுந்த சோகமடைந்தனர்.

அனைவரும் மாலையுடன் வந்து இறந்த காளைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறுதி சடங்கு நடைபெற்றது. வேனில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு சென்றனர். காளையின் உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக அந்த பகுதியை சேர்ந்த மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி சீருடையுடன் வந்து இறந்த காளைக்கு அஞ்சலி செலுத்தினர். பட்டாசு வெடித்தும் மேளதாளத்துடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. மனித உயிர்களுக்கு இணையாக கருதப்பட்ட காளை இறந்தது அந்த பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. #Jallikattu
Tags:    

Similar News