செய்திகள்

மதுரையில் சென்னை தம்பதியை காரில் கடத்தி ரூ.26 லட்சம் நகை, பணம் பறிப்பு - 8 பேர் கைது

Published On 2018-06-02 09:34 GMT   |   Update On 2018-06-02 09:34 GMT
மதுரையில் கணவன்-மனைவியை குழந்தைகளுடன் காரில் கடத்திச் சென்று ரூ.26 லட்சம் நகை-பணத்தை பறித்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி லட்சுமி (வயது 42). இவர்களுக்கும், மதுரை வடபழஞ்சி புதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் தரப்புக்கும் இடையே கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 12-ந் தேதி சென்னையில் இருந்து வெங்கடேசன் தனது மனைவி லட்சுமி மற்றும் குழந்தைகளுடன் மதுரை வந்தார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் லட்சுமி தனது ஆராய்ச்சி படிப்புக்கான (பி.எச்.டி.) கல்வி சான்றிதழை வாங்கி விட்டு பல்கலைக்கழக அலுவலகம் முன்பு நின்றிருந்த போது அங்கு திடீரென வந்த ஜெயச்சந்திரன் மற்றும் 10 பேர் ஆயுதங்களை காட்டி மிரட்டி வெங்கடேசனையும், லட்சுமி மற்றும் குழந்தைகளையும் காரில் கடத்திச் சென்றனர்.

பொள்ளாச்சி பகுதிக்கு கடத்திச் சென்ற அந்த கும்பல் அவர்களை மிரட்டி ரூ. 17 லட்சம் மற்றும் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள 45 பவுன் நகைகளை பறித்துக் கொண்டது.

மேலும் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்னை தம்பதியை விட்டு விட்டு அந்த கும்பல் சென்று விட்டது.

அதன் பின்னர் அடிக்கடி கூடுதல் பணம் கேட்டு போனில் தொந்தரவு செய்ததாகவும் தெரிகிறது. பணம் தராவிட்டால் குடும்பத்தினரை கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து வெங்கடேசன் சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகாரை மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு போலீஸ் டி.ஜி.பி. அனுப்பி வைத்து சம்பந்தப்பட்ட கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

சென்னை தம்பதியை குழந்தைகளுடன் கடத்தி பணம் பறித்த வடபழஞ்சி புதுரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் தலைமறைவாகி விட்டார்.

கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மதுரை புளியங்குளத்தைச் சேர்ந்த ரவி (39), குருபிரபு (22), ஜெகதீஷ் பாண்டியன் (27), கருப்பசாமி (24), குமாரவேல் (22), மாரிச்சாமி (22), குரு (22), செந்தில் (28) ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். கோபி உள்ளிட்ட சிலர் தலைமறைவாகி விட்டனர்.

கைதான 8 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது ஆள் கடத்தல், பணம் பறிப்பு, சித்ரவதை செய்தல் உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தம்பதியை கடத்தி பணம்-நகைகளை பறித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News