செய்திகள்

தூத்துக்குடியில் மீண்டும் போலீஸ் தடியடி - அரசு மருத்துவமனையில் திரண்ட மக்கள் விரட்டியடிப்பு

Published On 2018-05-23 07:46 GMT   |   Update On 2018-05-23 07:46 GMT
தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தியதால், அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். #SterliteProtest #ThoothukudiFiring
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அரசை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினார்கள். இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.



ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என அரசு அறிவித்தால்தான் பலியானவர்களின் உடல்களை வாங்குவோம் என்று அவர்களது உறவினர்கள் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன்பின்னர் அரசு மருத்துவமனை பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.  #SterliteProtest #ThoothukudiFiring
Tags:    

Similar News