செய்திகள்

ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் மகிழ்ச்சி: செங்கோட்டையன் சொல்கிறார்

Published On 2018-05-21 22:17 IST   |   Update On 2018-05-21 22:17:00 IST
அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் எனக்கு மகிழ்ச்சி என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள முருகன் புதூர் பவளமலை முருகன் கோவிலுக்கு ரூ.55 லட்சம் மதிப்பில் சாலையை புதுப்பிக்கும் பணியை தொகுதி எம்.எல்.ஏ.வும், கல்வித்துறை அமைச்சருமான கே.ஏ.செங் கோட்டையன் தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

எனது தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையம், வெள்ளாங்கோவில், மொடச்சூர், நம்பியூர் ஆகிய பள்ளிகள் உள்பட 12 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட உள்ளது.

அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் கட்டாயப்படுத்தி சேர்க்க முடியாது. அவர்களே அக்கறை எடுத்து அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

அரசு பள்ளிகளில் யாருக்கும் தனிப்பட்ட முறையில் சிறப்பு திட்டங்கள் கிடையாது. மாணவர்களை ஊக்குகிற வகையில் அரசு சார்பில் தற்போது 14 பொருட்கள் தனியார் பள்ளிகளில் வழங்காத அளவுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பள்ளிகளில் ‘‘ஸ்மார்ட்’’ வகுப்பறைகள் தொடங்கப்படுகிறது.

ரூ.468 கோடி செலவில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையதள வசதியுடன் கனிணி கல்வியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதெல்லாம் தனியாரை மிஞ்சும் அளவுக்கு அவர்களுக்கு ஆக்கத்தையும், ஊக்கத்தையும் தரும் அளவுக்கு பணிகள் நடந்து வருகிறது.

இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்க்கப்படுவார்கள்.

விழாவில் சத்தியபாமா எம்.பி., கோட்டாட்சியர் கோவிந்தராஜன், தாசில்தார் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News