செய்திகள்
விருதுநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.

காமராஜர் கண்ட கனவு பலிக்கும் - விருதுநகரில் கமல்ஹாசன் பேச்சு

Published On 2018-05-19 04:20 GMT   |   Update On 2018-05-19 04:20 GMT
காமராஜர் கண்ட கனவு பலித்துள்ளது. அவர் வழங்கிய இலவச உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகள் இன்று ஆசிரியர்களாகி இந்த சாதனை மாணவர்களை உருவாக்கி உள்ளனர் என்று விருதுநகரில் கமல்ஹாசன் பேசினார்.
விருதுநகர்:

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 2 நாட்களாக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்தார்.

நேற்று விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகரில் பொதுமக்களை சந்தித்தார்.

சிவகாசியில் பஸ் நிலையம் அருகே திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசும் போது, இப்போது இங்கு பெய்துள்ள மழையில் நீங்கள் நனைந்துள்ளீர்கள். நான் உங்கள் அன்பு மழையில் நனைகிறேன். இந்த அன்பை தரிசிக்கத்தான் நான் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் நீங்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். நமது அமைப்பின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள விசில் செயலி அமைப்பை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

அதைத் தொடர்ந்து விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசும்போது, நான் விருதுநகர் வரும் போது ஒரு நல்ல மகிழ்ச்சியான செய்தியை கேட்டேன். இந்த மாவட்ட மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்பது தான் அந்த செய்தி. இதன்மூலம் காமராஜர் கண்ட கனவு பலித்துள்ளது. அவர் கண்ட கனவுகள் மீண்டும் பலிக்கும். அவர் வழங்கிய இலவச உணவை சாப்பிட்ட மாணவ-மாணவிகள் இன்று ஆசிரியர்களாகி இந்த சாதனை மாணவர்களை உருவாக்கி உள்ளனர்.

நான் தற்போது காமராஜர் வீட்டுக்கு சென்று வந்தேன். சிறிய தெருவில் அவரது வீடு உள்ளது. ஆனால் விசாலமான பாதையை அவர் மாணவர்களுக்கு காட்டியுள்ளார். கல்விக்கு காமராஜர் செய்த சேவை மகத்தானது. காமராஜர் நமக்கு காட்டிய பாதையை தற்போது செப்பனிட வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. நானும், மக்கள் நீதி மய்ய தொண்டர்களும் அதனை செய்வோம்.

இங்கு என்னைவிட மூத்தவர்கள் உள்ளனர். அவர்கள் காமராஜர் கண்ட கனவு பலிக்குமா? பலிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருந்த நிலை மாறி இன்று அவர்கள் முகத்தில் புன்னகை தெரிகிறது. கால சுழற்சியில் காமராஜர் கண்ட கனவு பலிக்கும் நிலை ஏற்படும்.

நாம் மேற்கொள்ளும் பணியில் பல்வேறு இடையூறுகள் வரலாம். அதனை எதிர்கொண்டு நாம் வெற்றிபெற வேண்டும். இங்கு திரண்டுள்ள உங்களை பார்க்கும்போது எனக்குள் உத்வேகம் பிறக்கிறது. உங்களது ஆசியுடன் லட்சியங்களை நிறைவேற்றுவேன்.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.


Tags:    

Similar News