செய்திகள்

நெடுவாசலில் மீண்டும் தீவிரமடையும் போராட்டம்

Published On 2017-04-18 10:11 GMT   |   Update On 2017-04-18 10:11 GMT
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
புதுக்கோட்டை:

மத்திய, மாநில அரசுகளின் பேச்சுவார்த்தை, உறுதி மொழியை ஏற்று இந்த கிராமங்களில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி கடந்த மாதம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்க திட்டமிட்டனர். அதன்படி 70 கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினர். அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி கடந்த 12-ந்தேதி முதல் நெடுவாசலில் மீண்டும் போராட்டம் தொடங்கியது.

7-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. நேற்று நடந்த போராட்டத்தில் நுற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்று எழுதப்பட்ட உருவ பொம்மையை பாடையாக கட்டி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர் அந்த உருவ பொம்மையை சுற்றி பெண்கள் அமர்ந்து ஒப்பாரி வைத்தனர். தொடர்ந்து அந்த பொம்மை தீவைத்து எரிக்கப்பட்டது. 22 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் நெடுவாசலில் மீண்டும் போராட்டம் தொடங்கி தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையே வருகிற 20-ந்தேதி ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக டெல்லியில் இருந்து 120 பேர் கொண்ட குழு வருகைதர உள்ளதாக கதவல் வெளியாகி உள்ளது. அவர்களை எந்த விதத்திலும் அனுமதிக்கமாட்டோம் என போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க கடந்த பிப்ரவரி 15-ந் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது. மறுநாள் 16-ந் தேதி முதல் போராட்டம் தொடங்கியது. ஜல்லிக்கட்டு போராட்டம் போல் நடந்த இந்த தன்னெழுச்சி போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் ஆதரவு அளித்தனர். தினமும் அவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது.

தற்போது மீண்டும் தொடங்கியுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு சமையல் செய்யும் பணியும் தொடங்கியுள்ளதால் அங்கு பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவை திரட்டவும், அதிக அளவிலான கூட்டத்தை கூட்டவும் நெடுவாசல் போராட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Similar News