IPL 2025: ஹாட்ரிக் வெற்றி பெறுமா குஜராத்? - ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்
- தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானை 44 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்த ஐதராபாத் அணி அதன் பிறகு லக்னோ, டெல்லி, கொல்கத்தாவிடம் வரிசையாக உதை வாங்கியது.
- தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோற்ற குஜராத் அணி அடுத்த ஆட்டங்களில் மும்பை, பெங்களூருவை துவம்சம் செய்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடைபெறும் 19-வது லீக் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது. இரவு 7.30 மணிக்கு ஐதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸை சந்திக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானை 44 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்த ஐதராபாத் அணி அதன் பிறகு லக்னோ, டெல்லி, கொல்கத்தாவிடம் வரிசையாக உதை வாங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, கிளாசென், இஷான் கிஷன் என அதிரடி சூரர்கள் இருந்தும் பேட்டிங் ஒருசேர 'கிளிக்' ஆகாததன் விளைவு ஐதராபாத் அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 120 ரன்னில் சுருண்டு மோசமாக தோற்ற ஐதராபாத் அணி தவறுகளை திருத்திக் கொண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிக்கும்.
தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோற்ற குஜராத் அணி அடுத்த ஆட்டங்களில் மும்பை, பெங்களூருவை துவம்சம் செய்தது. அந்த அணியில் சாய் சுதர்சன் (74, 63 மற்றும் 49 ரன்), கேப்டன் கில், ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் சாய் கிஷோர், முகமது சிராஜ் மிரட்டுகிறார்கள். ஆனால் 'சுழல் மன்னன்' ரஷித்கான் (3 ஆட்டத்தில் ஒரு விக்கெட்) தடுமாறுவது ஆச்சரியமளிக்கிறது. அவரும் விக்கெட் வேட்டை நடத்தினால் குஜராத் பந்து வீச்சு மேலும் வலுவடையும். 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ள குஜராத்தின் வீறுநடைக்கு ஐதராபாத் முட்டுக்கட்டை போடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.