தொடர் தோல்வியை தவிர்க்குமா சென்னை? டெல்லி அணியுடன் இன்று மோதல்
- இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் 19-ல் சென்னையும், 11-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 17-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.
சென்னை அணி உள்ளூரில் நடந்த தனது தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் பணிந்தது. கவுகாத்தியில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோற்றது. அந்த ஆட்டத்தில் 183 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை 176 ரன்னில் அடங்கியது. கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 45 ரன் தேவையாக இருந்த போது ரவீந்திர ஜடேஜா, டோனி இருந்தும் இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் போனது ஏமாற்றத்தை அளித்தது. கடந்த 2 ஆட்டங்களில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்த சென்னை அணி அதில் செய்த தவறுகளை திருத்தி வெற்றிப் பாதைக்கு திரும்பும் வியூகத்துடன் களம் இறங்கும்.
கடந்த ஆட்டத்தின் போது முழங்கையில் காயம் அடைந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அவர் நேற்று லேசான பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டார். அவர் உடல்தகுதியை எட்டாவிட்டால் சென்னை அணிக்கு பின்னடைவாகும். அவர் ஆடாத பட்சத்தில் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக டிவான் கான்வே களம் இறங்க வாய்ப்புள்ளது. முதல் 3 ஆட்டங்களில் (2, 5, 23 ரன்) சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர் ராகுல் திரிபாதி பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமானதாகும்.
பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது (9 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் கலீல் அகமது, பதிரானா வலுசேர்க்கின்றனர். இங்குள்ள மெதுவான தன்மை கொண்ட ஆடுகளத்தில் நூர் அகமதுவின் சுழல் ஜாலம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை பதம் பார்த்தது. அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை அதட்டியது. அந்த ஆட்டத்தில் 163 ரன்னில் ஐதராபாத்தை 'ஆல்-அவுட்' செய்த டெல்லி அணி 4 ஓவர்கள் மீதம் வைத்து இலக்கை எளிதாக எட்டிப்பிடித்தது.
பேட்டிங், பந்து வீச்சில் வலுவாக காணப்படும் டெல்லி அணி 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது. பேட்டிங்கில் பாப் டுபிளிஸ்சிஸ், ஜேக் பிராசர் மெக்குர்க், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், லோகேஷ் ராகுல், அஷூதோஷ் ஷர்மா நம்பிக்கை அளிக்கிறார்கள். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ் மிரட்டக்கூடியவர்கள்.
சுழலுக்கு உகந்த சேப்பாக்கம் ஆடுகளத்தில் நூர் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோர் தங்கள் அணிக்கு துருப்பு சீட்டாக விளங்குவார்கள் எனலாம். வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணியும், வெற்றி உத்வேகத்தை தொடர டெல்லி அணியும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்தும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் சென்னையும், 11-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன. சேப்பாக்கத்தில் 9 முறை சந்தித்ததில் சென்னை அணி 7-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2010-ம் ஆண்டுக்கு பிறகு டெல்லி அணி சென்னையை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்) அல்லது டிவான் கான்வே, ஷிவம் துபே, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஜாமி ஓவர்டான் அல்லது அன்ஜூல் கம்போஜ், டோனி, ஆர்.அஸ்வின், நூர் அகமது, கலீல் அகமது.
டெல்லி: ஜேக் பிராசர் மெக்குர்க், பாப் டுபிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், லோகேஷ் ராகுல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), அஷூதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், மொகித் ஷர்மா அல்லது டி.நடராஜன்.