null
முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: சுழற்பந்து மாயாஜாலத்தில் பாகிஸ்தானை சாய்த்தது ஆப்கானிஸ்தான்..!
- ஆப்கானிஸ்தானின் செதிகுல்லா அடல், இப்ராகிம் ஜத்ரன் அரைசதம் விளாசினர்.
- ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி, பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுக்கு இடையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் செதிகுல்லா அடல் 64 ரன்களும், இப்ராகிம் ஜத்ரன் 65 ரன்களும் விளாச 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானின் பஹீம் அஷ்ஃரப் 4 விக்கெட் விழ்த்தினார்.
பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் சைம் ஆயுப் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சகிப்ஜதா பர்ஹான் 18 ரன்களில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் பரூக்கி வீழ்த்தினார்.
அதன்பின் பஹர் ஜமான் (25), சர்மான் ஆகா (20) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷித் கான், நூர் அகமது முகமது நபி ஆகியோர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
10ஆவது வீரராக களம் இறங்கிய ஹாரிஸ் ராஃப் அதிரடியாக விளையாடி, ஆப்கானிஸ்தானை அச்சுறுத்தினார். அவரால் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் (16 பந்தில் 4 சிக்கர்) எடுத்த போதிலும் பாகிஸ்தானால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றி பெற்றது. ரஷித் கான், நூர் அகமது, முகமது நபி, பரூக்கி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதலாவதாக மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.