கோலி, ரோகித் ஓய்வு: இளம் வீரர்களுடன் செல்லும் இந்தியா தோல்வியை சந்திக்கும்- யோக்ராஜ் சிங்
- விராட் கோலி ஓய்வு பெற்றது கண்டிப்பாக இந்தியாவுக்கு இழப்பு.
- வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா போன்ற மகத்தான வீரர்கள் 50 வயது வரை விளையாடியிருக்க வேண்டும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை முன்னிட்டு புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இளம் அணியை உருவாக்க விரும்புவதாகவும் அதற்காக அவர் சீனியர் வீரர்களை கழற்றி விட பிசிசிஐக்கு பரிந்துரை செய்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் 2011 உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் இதேபோல சீனியர் வீரர்களை கழற்றி விட்ட இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் 8 படுதோல்விகளை சந்தித்தது. அதே போல விராட் கோலி, ரோகித் சர்மாவை வீட்டுக்கு அனுப்பியுள்ள இந்திய அணி அடுத்த இங்கிலாந்து தொடரில் தோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் வீரரும் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது:-
மிகப்பெரிய வீரரான விராட் கோலி ஓய்வு பெற்றது கண்டிப்பாக இந்தியாவுக்கு இழப்பு. 2011-ல் நிறைய சீனியர்கள் ஓய்வு பெற்றது, நீக்கப்பட்டது போன்ற விஷயங்களால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. ஏனெனில் பேக்-அப் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. விராட், ரோகித்திடம் இப்போதும் நிறைய கிரிக்கெட் எஞ்சியுள்ளதாக நான் கருதுகிறேன்.
நீங்கள் முழுமையாக இளம் வீரர்களை மட்டுமே வைத்து அணியை உருவாக்கினால் அது எப்போதும் கீழே விழும். இனியும் சாதிக்க எதுவுமில்லை என்று கருதி விராட் கோலி ஓய்வு பெற்றிருக்கலாம். வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா போன்றவர்கள் முன்னதாகவே ஓய்வு பெற்று விட்டனர்.
அவர்களைப் போன்ற மகத்தான வீரர்கள் 50 வயது வரை விளையாடியிருக்க வேண்டும். அவர்கள் ஓய்வு பெற்றதால் நான் சோகமடைந்துள்ளேன். ஏனெனில் தற்போது இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்த யாருமில்லை.
என்று யோக்ராஜ் கூறினார்.