டி20 உலகக் கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் வெற்றியால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு மங்கியதா?
- 5.35 நெட் ரன் ரேட்டுடன் குரூப் 1 புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னேறியுள்ளது.
- மைனஸ் 3.80 நெட் ரன் ரேட்டுடன் இந்தியா 3 ஆம் இடத்தில உள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குரூப் 1-ல் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ்- ஜிம்பாப்வே அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்தது. ஹெட்மையர் 85 ரன்களும், ரோவ்மேன் பொவெல் 59 ரன்களும் விளாசினார்.
பின்னர் 255 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 147 ரன்களில் சுருண்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5.35 நெட் ரன் ரேட்டுடன் குரூப் 1 புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னேறியுள்ளது. 3.80 நெட் ரன் ரேட்டுடன் தென் ஆப்பிரிக்கா அணி 2 ஆம் இடத்தில உள்ளது. மைனஸ் 3.80 நெட் ரன் ரேட்டுடன் இந்தியா 3 ஆம் இடத்தில உள்ளது.
நாளை மறுநாள் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிடும். ஒருவேளை அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசம் ஆகும்.
ஆகவே இந்திய அணியின் அரையிறுதி முடிவை தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் போட்டி தான் முடிவு செய்யும் என்பதால் இந்திய ரசிகர்கள் அந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.