கிரிக்கெட் (Cricket)

முன்னணி அணிகளுக்கு சாதகமாக டி20 அட்டவணை- நெட்டிசன்கள் விமர்சனம்

Published On 2025-11-26 17:51 IST   |   Update On 2025-11-26 17:51:00 IST
  • ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது.
  • பி பிரிவில் இலங்கை, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் இடம் பெற்றுள்ளன.

10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.

இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும். அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

40 லீக் ஆட்டம், 'சூப்பர் 8' சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது. இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும் இலங்கையில் கொழும்பு கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த அட்டவணை சர்வதேச அணிகள் சூப்பர் 8 சுற்றில் இடம்பெற ஏதுவாக தயாரிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது. இதில் 3 கத்துக்குட்டி நாடுகள் உள்ளன. இதனால் இந்த பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பி பிரிவில் இலங்கை, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் இடம் பெற்றுள்ளன. இதிலும் பலம் வாய்ந்த அணிகளாக ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் உள்ளது.

அதேபோல் சி பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், நேபாளம், இத்தாலி இடம் பெற்றுள்ளது. இதில் பலம் வாய்ந்த அணிகளாக இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன.

டி பிரிவில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. இதிலும் தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து அணிகள் பலம் வாய்ந்த அணிகளாக பார்க்கப்பட்டாலும் ஆப்கானிஸ்தான் இவர்களுக்கு சவால் விடும் வகையில் விளையாடும்.

இந்த 4 பிரிவிலும் எளிதான பிரிவாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்ற ஏ பிரிவு பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து பி பிரிவு உள்ளது. இந்திய அணி எளிதாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வகையில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தான் அட்டவணையும் தயார் செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

பலம் வாய்ந்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு வந்தால் ஆட்டம் விறுவிறுப்பாக செல்லும் என்பதால் இப்படி அட்டவணை தயார் செய்திருக்காலம் எனவும் ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

ஐசிசி தலைவராக ஜெய் ஷா உள்ளதால் இந்திய அணிக்கு சாதகமாக அனைத்தும் செய்வதாக உள்நாடு ரசிகர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு ரசிகர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News